சனி, 22 டிசம்பர், 2012

என் பப்பி



என் பப்பியின் கவிதை 
புரிவதே இல்லை 
என் மேல் வீட்டு அம்மாவுக்கு 
"
நாய் ஏன் இப்படி குரைக்குது?" 
என்கிறாள்!! 
என் பப்பியை விட 
மேலும் சத்தமாய்!!!!

அந்த ஒரு கேள்வி


படித்து தெளிந்த பின்னும்
பதில் கூற முடியாமல்
பாமரனிடம் தோற்கச்செய்த
அந்த ஒரு கேள்வி
இன்னும் என் நினைவில்
நீங்காத காயங்களாய்!

தூக்கத்தில் கூட,
கவிசேர்க்கும் என்னை
சிந்தனை குதிரைகளை
ஓடவிடும் நேரத்தில்
அந்த ஒரு கேள்வி
இன்னும் உறங்கவிடாமல்!

ஆயிரம் கவிதைகளில்,
ஆழ்ந்த கருத்துகளால்,
அறிவுரை கேள்விகளுடன்,
பறந்து வந்த என்னை
அந்த ஒரு கேள்வி
சிறகை என்னுடன் நெருங்கவிடாமல்!

கவிதை மன்றத்தில்
கவிபாடிய என்னிடம்
மண்ணில் அமர்ந்தபடி
கேட்கப்பட்ட
அந்த ஒரு கேள்வி
ஆயிரம் கருத்தை சொன்னீரே
நீவீர் அதன்படி நடந்தீரா?”

வியாழன், 20 டிசம்பர், 2012

வெற்றியின் தங்கை



தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!

நீ என்னை துயரப்படுத்தினாலும்
நீ என்னை காயப்படுத்தினாலும்
தோல்வியே 
உனை நான்
வரவேற்கிறேன்!

நீ என் கனவுகளை
திருடிச்சென்ற போதிலும்
நீ என் முன்னேற்ற படிகளையெல்லாம்
இடித்துவிட்ட போதிலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!

நீயே என் தலைகணத்தை
குறையவைத்தவள்
நீயே என் கலைநயத்தை
உயரவைப்பவள்
வெற்றியின் தங்கையே
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!

செவ்வாய், 18 டிசம்பர், 2012

கும்கி விமர்சனம்





யானைகளை வைத்து பிழைப்பு நடத்தும் தனது நண்பர் ஒருவருக்காக கோவில் திருவிழா, கல்யாண விழா போன்ற ஊர் விழாக்களுக்கு பழக்க படுத்த பட்ட தன்னுடைய உரிமம் இல்லாத யானையுடன் ஆதி காடு என்ற மலை கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட கும்கி அல்லாத தன்னுடைய யானையை கும்கி யானை என்று சொல்லி இரண்டு நாட்களில் திரும்பி விடும் நம்பிக்கையில் வருகிறார்கள் கதா நாயகனான அந்த யானையின் பாகன் விக்ரம் பிரபு, அவரது மாமா தம்பி ராமையா மற்றும் அஸ்வின் ராஜா. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் அந்த ஆதி காடு கிராமமே அவர்களை தங்களை காக்க வந்த கடவுளாய் வணங்குகிறார்கள்.

உண்மையான கும்கி யானை வரும் வரைக்கும் ஊர் மரியாதையை அனுபவிக்கலாம் என்று முடிவெடுக்கும் விக்ரம் பிரபு அந்த கிராமத்தின் ஊர் தலைவரின் மகளான லக்ஷ்மி மேனனை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறார். காதலில் மூழ்கி தவிக்கும் விக்ரம் பிரபு அந்த காதலுக்காக அறுவடை முடியும் வரையிலும் கொம்பன் யானையை விரட்ட அங்கேயே இருக்க முடிவு செய்கிறார்.

உரிமம் இல்லாத யானை, எந்த நேரமும் காட்டுகள் இருந்து ஊருக்குள் இறங்கி விடும் காட்டு யானையின் சூழல், தனது காதல் தெரிந்தால் கட்டுப்பாடான அந்த ஊருக்குள் நடக்க போகும் விபரீதம் இவை மூன்றையும் எப்படி கதா நாயகன் சமாளிக்க போகிறார் இறுதியில் என்ன நடந்தது இது தான் கும்கி படத்தின் கதை சுருக்கம்.

கதாநாயகன் விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம் சிவாஜியின் பேரன் என்றாலும் இன்னும் நடிப்பில் முதிர்ச்சி பெற அனுபவம் தேவை.

நாயகி லக்ஷ்மி மேனனுக்கும் இது தான் அறிமுக படம், மைனா அமலா பாலை போல இவரும் இன்னும் பல படங்களில் வளம் வருவார் என்று நம்பலாம்.

கௌரவ வேடத்தில் தம்பி ராமையா காமெடியிலும் பின்னி இருக்கிறார். கொம்பன் யானை எந்த நேரத்திலும் இறங்கலாம் என்ற தவிப்பில் அவரது நடிப்பை பார்த்து சிரிக்காதவர் யாருமே இல்லை.

இசையமைப்பாளர் டி. இமானுக்கு இந்த படமும் ஒரு முக்கிய படமாக அமைந்து விட்டது பாடல் வெளியான சில நாட்களிலேயே தெரிந்து விட்டது ஆனாலும் ஒவ்வொரு பாடலும் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலயே  அந்த பாடலுக்கான இசைய ஆரம்பித்துவிடுவது அடுத்து பாடல் வருவதற்கான உணர்வை தந்துவிடுகிறது.

ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்த படத்தில் தனது முழு திறமையையும் காட்டி உழைத்திருக்கிறார். சொல்லிட்டாலே பாடலில் அருவியை அவர் படம் பிடித்த விதம் மிக அருமை, படத்தின் மிக பெரிய பலம் இவரது ஒளிப்பதிவு.

மைனா படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கி இருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு பல மடங்காக இருந்தும் அதை ஓரளவு தான் சமாளித்திருக்கிறார், திரைக்கதையில் இன்னும் வேகம் தேவை.

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் நிச்சயம் படத்தை ரசிக்கலாம்.