கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஜனவரி, 2016

சகிப்பின்மை



சாதாரண மழையின் போதும்,
பேருந்தினுள்ளும் மழையடிக்க
குடை பிடித்து சகித்து கொள்கிறேன்!

எதுவுமே செய்திராத அரசியல்வாதி,
மறுபடியும் ஓட்டு கேட்டுவர
காசு வாங்கி சகித்து கொள்கிறேன்!

சாலை விதியை சரியாய் மதித்தும்,
சில எதிர்ப்பார்க்கும் போக்குவரத்து காவலரிடம்
ரூபாய் நூறு நீட்டி சகித்து கொள்கிறேன்!

கடவுள் உயர்வு தரும் நம்பிக்கையில்,
காசு பார்த்து விபூதி தரும்
அர்ச்சகரையும் சகித்து கொள்கிறேன்!

புத்தகத்தை ஒப்புவிக்கும்,
அனுபவமில்லா ஆசிரியர்களின் வகுப்பில்
தூங்கி விழுந்து சகித்து கொள்கிறேன்!

பக்கத்து வீட்டு குப்பைகளெல்லாம்,
என் வீட்டு வாசல் வந்தால்
ஓரம் ஒதுக்கி சகித்து கொள்கிறேன்!

ஆவணம் பெரும் அவசரத்தில்,
காக்க செய்யும் அதிகாரிகளிடம்
கையூட்டு கொடுத்து சகித்து கொள்கிறேன்!

நேரம் போக்க நினைத்து வந்தால்,
வாய் திறந்தால் பெருமைப்பேசும்
நண்பர்களையும் சகித்து கொள்கிறேன்!

இத்தனையும் சகித்துகொள்ளும் என்னால்
ஏனோ அம்மா சமையலில்
சிறிது உப்பு கூடவோ குறையவோ போனால்
சகித்து கொள்ளவே முடிவதில்லை!!

பசலை நோய்!



உனக்காக நான் இருப்பேன்
என்னிதயம் முழுதும் உன் ஞாபகத்தில்
எனக்காக நீ இருந்தால்
என்னுலகம் முழுதும் உன் காலடியில்

வந்து போன உந்தன் நினைவில்
வெந்து போகுது எந்தன் இதயம்

நீயும் இருந்தால் மண்ணில் இருப்பேன்
இல்லை என்றானால் மண்ணில் புதைவேன்

உனது முகம் பார்க்கவே
காத்து இருந்தேன்
காத்து இருந்தேன்
நீ எங்கே எங்கே எங்கே?

நீ வீசிய வார்த்தை என் செவியில் ஒலிக்குதே
நீ பேசிய மௌனம் என் இதயம் கிழிக்குதே
மொழியால் விழியால்
நீ என்னை வருத்தவே
காயங்கள் போதுமே
கனவுகள் வலிக்குதே
விழிகளின் வழியிலே என்னுதிரம் வடியுதே!

ஒன்றும் அறியாது இருந்தவள் நான்
என் மனதினுள் நுழைந்து போதித்தாய்!
நீயே என் வாழ்க்கை என்றானதுமே
எனை விட்டு வெளியேறி சோதித்தாய்!
உடன் யாருமில்லா இப்பயணத்தில்
படகை செலுத்துகிறேன் நான் தனியாய்!
கரையை சேருமோ என் பயணம்?
வரும் வழிகள் நெடுகிலும் பேராபத்தாய்!

செவ்வாய், 3 நவம்பர், 2015

அம்மாவின் அரிவாள்மனை


முதுகில் எதை வைத்து அழுத்தினாலும்
நறுக்கி தள்ளும்
அம்மாவின் அரிவாள்மனை!

அம்மாவிற்கு சீதனமாக தரப்பட்ட
எத்தனையோ பண்ட பாத்திரங்கள்
துருப்பிடித்து பழசாகி
பழைய இரும்புக்கும்
பொங்கல் முந்திய நாள் கருகியும்
போன போதும்
அரிவாள்மனை மட்டும்
பக்குவமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது!

அம்மாவின் அப்பா பட்டறையில்
அவளுக்காகவே அவராள்
அடிக்கப்பட்டு உருப்பெற்ற
அரிவாள்மனையாதலால்
அதற்கு எப்பொழுதுமே தனிச்சிறப்பு!

அவசரத்திற்கு அரிவாள்மனையை
வாங்கிய பக்கத்து வீட்டு
ராணியக்கா அதை
சிறு நெளிசலுடன் திருப்பித்தர
வசவு வாங்கி கட்டிக்கொண்டாள்
அதிலிருந்தே அரிவாள்மனையை
யாருக்கும் இரவலாய் கொடுப்பதில்லை!

உறவு வீடுகளுக்கு சென்றாலும்
தன்னுடைய அரிவாள்மனையைப்போல
அவர்களுடையது இல்லையென்று
தம்பட்டம் அடிப்பதற்காகவே
காய்கறி நறுக்கும் வேலையில்
இறங்கிவிடுவாள்!

அரிவாள்மனைக்கே பழக்கப்பட்டதால்
கத்தியும் அரிவாளும்
கொலை செய்வதற்கான ஆயுதங்கள்
என்பதே அம்மாவின் நினைப்பு,
அவைகளுக்கு வீட்டில் என்றுமே இடமில்லை!

மீன்கள் நறுக்கையில்
தவறுதலாய் விரலில்பட
ரத்தம் சொட்டியபோதும்
திட்டு வாங்கிக்கொண்டது
வழுக்கிசென்ற மீன் தானேயன்றி
அரிவாள்மனையல்ல!

கடந்த வாரம் தவறி விழுந்துடைந்த
அரிவாள்மனையுடன் சேர்ந்து
அம்மாவின் மனமும் உடைந்து போயிற்று
தேங்காய் திருவியுடன் சேர்ந்த
புது அரிவாள்மனை வாங்கியும்கூட
அவளுக்கோ மனநிறைவில்லை !

அம்மாவுக்கும் அரிவாள்மனைக்குமான
அன்பை
இதுவரை யாருமே அறிந்ததேயில்லை,
அடுக்களைக்குள் முடங்கிக்கிடக்கும்
ஒவ்வொரு அம்மாக்களுக்குமே
இதுபோன்றதோர் பிணைப்பு
இருக்கத்தான் செய்கிறது!

புதன், 12 ஆகஸ்ட், 2015

வஞ்சனை



இந்த உலகத்தில் உள்ள
எல்லா வஞ்சனைகளுக்கும்,
துரோகங்களுக்கும்
விளக்கு பொருத்தி
ஒரு உருண்டை செய்தால்
அது சூரியனை விடவும்
மிக பிரமாண்டமாகவும்
அதிக வெளிச்சம் தரக்கூடியதாகவும்
இருக்கும்...

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

காற்று



காற்று
இந்த கானகத்தின்
உயிர் மூச்சு!

மலரில் வாசமாய்
உயிரில் சுவாசமாய்
மூங்கிலில் ராகமாய்
வாழ்வின் பாகமாய்
எல்லா வடிவிலும்
நிறைந்திருக்கும்
காற்று
இந்த கானகத்தின்
உயிர் மூச்சு!

காற்று
இசையின் தொடக்கமது
மூங்கிலை
விறகாகாமல் காப்பாற்றிய
இனிய ராகமது
காற்று இல்லையெனில்
காதுகளும் தேவையில்லை
இசைக்கே உயிர்த்தந்த
காற்று
இந்த கானகத்தின்
உயிர் மூச்சு!

சாதிமத சாக்கடைகள்
மனிதன் மட்டுமே
அறிந்திருக்கும்
அவமானங்கள்
காற்றோ
சாதிமத வேறுபாடுகள்
பார்ப்பதேயில்லை
எல்லா உயிரையும்
சமமாக பாவிக்கும்
காற்று
இந்த கானகத்தின்
உயிர் மூச்சு!

எந்த மாநிலமும்
அணை போட்டு தடுக்காத
எந்த நாடுகளும்
வேலி போட்டு அடைக்காத
காற்று
இந்த கானகத்தின்
உயிர் மூச்சு!

கனவுகள்


கனவுகள்
எனது கவிதைகள்
கண்களே அறியாத காட்சிகள்,
இருளிலும் அழியாத
வெளிச்சங்கள்!

கனவுகள்
இரவிலே எனது
பாதைகள்,
இதயம் இனிக்கும்
இன்பங்கள்!

கனவுகள்
ஆகாயம் தொட்டுவிடும்
ஆசைகள்,
அணையாதிருக்கும்
நெருப்புகள்!

கனவுகள்
விதைகளாயிருக்கும்
விருட்சங்கள்
வாழ்வை எட்டிப்பார்க்கும்
இலட்சியங்கள்!

உணவா மருந்து



வள்ளுவனையும்,
பாரதியையும்
தினந்தோறும் படித்துவந்தேன்
அவர்களின் கருத்துகளில்
ஒரு சந்தேகம் உண்டாயிற்று
சந்தேகத்தை நிவர்த்தி செய்ய
இருவரையும் காண
சொர்க்கத்திற்கே சென்றேன்

முதலில்
வள்ளுவனைக் கண்டேன்
அய்யனே வணக்கம்
உங்கள் குறட்பாலில்
ஒரு சின்ன சந்தேகமென்றேன்
என்ன என்று வினவினார்
வள்ளுவன்
அய்யனே
செவிக்குணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
என்றீர்
ஆனால்
எங்களின் செவிகளோ வயிற்றிற்க்கு
சிறிது ஈவதர்க்கான உணவில்லாது
அடைத்து போயிற்று! என்றேன்

வள்ளுவன்
தமது குறளை கொஞ்சம்
மாற்றி செய்தான்
'வயிற்றுக் குணவில்லாத போழ்து இங்கு
செவ்களும் மூடப் படும்"
வள்ளுவனிடம் நன்றி சொல்லி
அங்கிருந்து நகர்ந்தேன்.

அடுத்ததாக
பாரதியைக் கண்டேன்
மகாகவியே வணக்கம்
உமது பாடலில்
ஒரு சின்ன சந்தேகமென்றேன்
என்ன என்றான் பாரதி
பாரதி நீ
"தனியொறு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்"
என முழங்கினாய்
ஆனால் நாங்கள்
இந்த ஜகத்தினை
எத்தனை முறைதான்
அழிப்பது?

பாரதியும் தமது பாடலை கொஞ்சம்
மாற்றிச் செய்தார்
தனியொரு மனிதனுக்கு மட்டும்
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்"
பாரதியிடமும் நன்றி சொல்லி

உணவே மருந்தாம்
என சொன்ன சித்தனை
உணவே வேண்டாத
மருந்து தரச் சொல்ல
தேடி அலைகிறேன்!

வெள்ளி, 31 ஜூலை, 2015

ஏவுகணை நாயகர்




பாரதி கண்ட அக்கினி குஞ்சை
வளர்த்தெடுத்து சிறகு முளைக்க
பறக்க செய்தவரே!
ஏவுகணைகளும் எந்திரங்களும்
எளிதாய் வசப்படுத்திய
ஏவுகணை நாயகரே!
தூக்கத்தில் வந்த
கனவுகளையும் கூட
தூங்கவிடாமல் செய்யும்
கனவுகளாய் மாற்றியவரே!
அணுவிலும் அமைதிக்கண்ட
அதிசயப்பிரவியே!
அமெரிக்காவின் செயற்கைகோளையே
அரலச்செய்த ஆச்சரியமே!
தமிழ்வழிக்கல்வியிலும்
அறிவியலை சாத்தியப்படுத்திய
அறிவியல் சக்கரவர்த்தியே!
பெயரின் பின்னால் சேர்ந்ததற்காய்
பத்மபுஷனையும் பாரதரத்னாவையும்
பெருமைப்பட செய்தவரே!
உம் தலையிலிருந்து
வழிந்ததெல்லாம்
வெள்ளை முடிகளல்ல
ஒவ்வொன்றும் மூளைகலென
உலகரியச்செய்தவரே!
காந்தி காலத்தில்
வாழமுடியாக்குறை தீர்த்த
எங்கள் விஞ்ஞான காந்தியே!
இன்று
உமது விரல்படவே
காத்துக்கிடக்கிறது
கரும்பலகைகள்!
உமதுரை கேக்கவே
தவம் கிடக்கிறது
மாணவ செவிகள்!
உமது குரலெழுப்பவே
ஏங்கி தவிக்கிறது
ஒலிப்பெருக்கிகள்!
உம் கைப்படவே
நாதத்தை சுமந்தப்படி
உமது வீணை!
புண்ணியம் தரும்
அந்த இராமேஸ்வரமே
உம்மில் புண்ணியம்
தேடிக்கொண்டது!
வெறும் கண்ணீர் அஞ்சலியுடன்
முடிந்துவிடுவதல்ல
உமக்கான அஞ்சலி
இந்தியா வல்லரசு என்பதே
உமக்கான உண்மையான அஞ்சலி!
விரைவில் வரும் அந்த காலம்
அதற்காய் எங்களை ஆசிர்வதியுங்கள் கலாம்!!!

வெள்ளி, 19 டிசம்பர், 2014

புழக்கடை முனிகள்




பெசாவரென்றால்
உய‌ர‌மான‌ கோட்டையாம்
கோட்டையின்  அடித்தளமின்றோ
மண்ணுக்கடியில்
மண்ணோடு மண்ணாய்,
ராணுவ பள்ளியோ
பிள்ளைகளின் சுடுகாடாய்,
கனிஷ்கரின் தலைநகரே
இன்று கண்ணீரில் கொடுநரகாய்

ஏய் தாலிபான் மிருகமே
பள்ளிக்குழந்தைகள்
இன்றுனக்கு பலியாடாய்
நிச்சயம்  ஒருநாள் நீயும்
படுகேவலமாய் பலியாவாய்

புத்தகமேந்திய கைகள்
ஏ.கே நாற்பத்தியேழேந்திய
கைகளையும் விட வலியதென்றோ
உன் தோட்டாக்களால் வீழ்த்திட
துணிந்தாய்

விதைத்தவனிருக்க
விரலையருத்து
என்ன சுகம் கண்டாய்???

ஒருவனை நரகத்திர்க்கனுப்பியதற்க்கா???
அந்த நரகத்தையே
பூமிக்கிழுத்து வந்தாய்???

அந்த வெறி நாயின் மகன்கள்
தெரு நாயாய் பிறந்திருக்கலாம்
அல்லது மலமுன்னும் பன்னியாய்.

அவன்களை பெற்றவள்
அன்று கருவாகாதிருந்திருந்தால்,
அந்த பிஞ்சு குழந்தைகள்
இன்று பலியாகாதிருந்திருக்கும்.

தாய்மார்களின் சாபங்களெல்லாம்
தாலிபான்களின் உயிர்குடிக்கட்டும்
உறைந்து கிடக்கும் ஒவ்வொரு உதிரமும்
அவர்களின் உதிரத்தால் மீண்டும் ஈரமாகட்டும் சீக்கிரமாய் அந்த தீவிரவாதத்திற்கே
வாதம் வந்து முடங்கி போகட்டும்

சகோதரர்களே
உங்கள் உயிரின் வலி
நாங்கள் அறிவோம்
உங்கள் எதிரிகள் நிச்சயமாய்
நாங்களில்லை என்பதை
இன்றாவது உணர்ந்துகொள்ளுங்கள்
இதோ என்னால் முடிந்தது
எல்லா இந்தியர்களின் சார்பிலும்
என் விழிநீர்!

- தங்கராஜ் பழனி

வியாழன், 16 அக்டோபர், 2014

வெயில்


கொடுத்து கொடுத்தே
சிவந்த கை கொண்ட
கருணனின் தகப்பனை
வழிபட்ட அளவு
யாரும் வருனனை
வழிபட்டதில்லை!

வெயிலுக்கு எப்பொழுதுமே
காலமும் நேரமும் உண்டு

உச்சியில் முத்தமிடும்
வெயிலை
என்னதான் நாம்
திட்டி தீர்த்தாலும்
மழையை ஒதுக்கவே
பெரும்பாலும்
குடை பிடிக்கிறோம்!

தொன்னூறுகளில்
சச்சின் நிற்கும் பொழுதில்
குறுக்கிட்டால்
எல்லோர் நாவிலும்
வதை படும்
மழை!

வெயிலுக்கு நிறம் உண்டு
மழையின் நிறமோ இருள்

எப்போதுமே
மழை பெய்து கொண்டேயிருக்கும்
ஊர்களிலெல்லாம்
வெயில் தான் கவிதை!

ஞாயிறு, 18 மே, 2014

புத்தம்



போரை வெறுத்தவன்
அமைதி விரும்பி
அதை பரவ செய்ய
இங்கிருந்து
அனுப்பிய ஆயுதம்!
பரவியதோ போர்
நமக்கெதிராய்!!!

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலினால்




காதலும்
கடவுளும் 
ஒன்றுதான்
ரெண்டுமே இருக்கு ஆனா இல்ல!!!

நீ விட்டுச்சென்ற அவ்விடமே
விழித்துகொண்டிருக்கிறது
என் மேல் நீ வைத்திருப்பதாய் சொன்ன
காதல்!!!

ஒவ்வொரு திருமணத்திலும் 
எங்காவது செத்து கொண்டுதானிருக்கிறது 
காதல்!!!

உனக்காக எழுதப்பட்ட கவிதைகளனைத்தும்
இன்று நண்பனின் காதலியிடம்
அவளுக்காக எழுதப்பட்டதாய் 
அவனிடமிருந்து!!!

நீயே வேண்டுமென்றே
வேண்டி நின்றேன்,
நீயோ வேண்டும் என்றே 
வேண்டா வெறுப்பில்
எனை வேண்டாமேன்றாய்!!!

அழகான சிறு பொய்கள் சொல்லி
உன்னை ஏமாற்றுபவனாயிருந்தேன்
ஆனாலும்
ஏமாந்து போனதோ நான் தான்
நீ என்னை விரும்புகிறாய் 
என்று சொன்ன ஒற்றை பொய்யினால்!!!

ஏதோ தவறு செய்து விட்டு
மன்னிப்பு கேட்டு அழ தொடங்கினாய்,
நானும் அழுதுவிட்டேன்
இன்று தான் புரிகிறது
என்னை மொத்தமாய் அழவைக்க
அது நீ பார்த்த ஒத்திகை என்பது!!!

எனக்கான கல்லறையை 
நானே செதுக்கி கொண்டிருந்தேன்
நீ என்னுடனிருந்த வேளைகளிலெல்லாம்!!!

காதலர் தினம் கொண்டாடுவதர்க்காகவே
இங்கு பல காதல்கள் 
முளைக்கின்றன!!!

திங்கள், 7 ஜனவரி, 2013


.
காதலொன்று வாழ்க்கை தனில் நுழைந்து விட்டால்
நாசம் நாசம் சர்வமும் நாசம்...

ரத்தத்தை விட வேகமாய் பாயும்
மூளை நரம்புக்குள் ஞாபக வியாதி!

தூங்கும் நேரம் விழித்திருந்தும்
விழிக்கும் நேரம் தூங்கி போகும் விழிகள்!

காதலை மட்டுமே பேச சொல்லும்!

காதலின் இசையையே செவிகள் அறியும்!

இதயம் இருந்தும் இல்லாது போகும்!

உண்ணும் உணவோ செரிக்காத வயிறு!

சாலை சாக்கடை எதுவும் அறியாது
கையில் இருக்கும் கொலை பேசி!

மிதி வண்டி மறந்து கால்கள் நடந்தே போகும்!

இறுதியில் மிச்சமாய் இருப்பது உயிரும் மயிருமே!

காதலொன்று வாழ்க்கை தனில் நுழைந்து விட்டால்
நாசம் நாசம் சர்வமும் நாசம்...

சனி, 22 டிசம்பர், 2012

என் பப்பி



என் பப்பியின் கவிதை 
புரிவதே இல்லை 
என் மேல் வீட்டு அம்மாவுக்கு 
"
நாய் ஏன் இப்படி குரைக்குது?" 
என்கிறாள்!! 
என் பப்பியை விட 
மேலும் சத்தமாய்!!!!

அந்த ஒரு கேள்வி


படித்து தெளிந்த பின்னும்
பதில் கூற முடியாமல்
பாமரனிடம் தோற்கச்செய்த
அந்த ஒரு கேள்வி
இன்னும் என் நினைவில்
நீங்காத காயங்களாய்!

தூக்கத்தில் கூட,
கவிசேர்க்கும் என்னை
சிந்தனை குதிரைகளை
ஓடவிடும் நேரத்தில்
அந்த ஒரு கேள்வி
இன்னும் உறங்கவிடாமல்!

ஆயிரம் கவிதைகளில்,
ஆழ்ந்த கருத்துகளால்,
அறிவுரை கேள்விகளுடன்,
பறந்து வந்த என்னை
அந்த ஒரு கேள்வி
சிறகை என்னுடன் நெருங்கவிடாமல்!

கவிதை மன்றத்தில்
கவிபாடிய என்னிடம்
மண்ணில் அமர்ந்தபடி
கேட்கப்பட்ட
அந்த ஒரு கேள்வி
ஆயிரம் கருத்தை சொன்னீரே
நீவீர் அதன்படி நடந்தீரா?”