செவ்வாய், 5 ஜனவரி, 2016

சகிப்பின்மை



சாதாரண மழையின் போதும்,
பேருந்தினுள்ளும் மழையடிக்க
குடை பிடித்து சகித்து கொள்கிறேன்!

எதுவுமே செய்திராத அரசியல்வாதி,
மறுபடியும் ஓட்டு கேட்டுவர
காசு வாங்கி சகித்து கொள்கிறேன்!

சாலை விதியை சரியாய் மதித்தும்,
சில எதிர்ப்பார்க்கும் போக்குவரத்து காவலரிடம்
ரூபாய் நூறு நீட்டி சகித்து கொள்கிறேன்!

கடவுள் உயர்வு தரும் நம்பிக்கையில்,
காசு பார்த்து விபூதி தரும்
அர்ச்சகரையும் சகித்து கொள்கிறேன்!

புத்தகத்தை ஒப்புவிக்கும்,
அனுபவமில்லா ஆசிரியர்களின் வகுப்பில்
தூங்கி விழுந்து சகித்து கொள்கிறேன்!

பக்கத்து வீட்டு குப்பைகளெல்லாம்,
என் வீட்டு வாசல் வந்தால்
ஓரம் ஒதுக்கி சகித்து கொள்கிறேன்!

ஆவணம் பெரும் அவசரத்தில்,
காக்க செய்யும் அதிகாரிகளிடம்
கையூட்டு கொடுத்து சகித்து கொள்கிறேன்!

நேரம் போக்க நினைத்து வந்தால்,
வாய் திறந்தால் பெருமைப்பேசும்
நண்பர்களையும் சகித்து கொள்கிறேன்!

இத்தனையும் சகித்துகொள்ளும் என்னால்
ஏனோ அம்மா சமையலில்
சிறிது உப்பு கூடவோ குறையவோ போனால்
சகித்து கொள்ளவே முடிவதில்லை!!

பசலை நோய்!



உனக்காக நான் இருப்பேன்
என்னிதயம் முழுதும் உன் ஞாபகத்தில்
எனக்காக நீ இருந்தால்
என்னுலகம் முழுதும் உன் காலடியில்

வந்து போன உந்தன் நினைவில்
வெந்து போகுது எந்தன் இதயம்

நீயும் இருந்தால் மண்ணில் இருப்பேன்
இல்லை என்றானால் மண்ணில் புதைவேன்

உனது முகம் பார்க்கவே
காத்து இருந்தேன்
காத்து இருந்தேன்
நீ எங்கே எங்கே எங்கே?

நீ வீசிய வார்த்தை என் செவியில் ஒலிக்குதே
நீ பேசிய மௌனம் என் இதயம் கிழிக்குதே
மொழியால் விழியால்
நீ என்னை வருத்தவே
காயங்கள் போதுமே
கனவுகள் வலிக்குதே
விழிகளின் வழியிலே என்னுதிரம் வடியுதே!

ஒன்றும் அறியாது இருந்தவள் நான்
என் மனதினுள் நுழைந்து போதித்தாய்!
நீயே என் வாழ்க்கை என்றானதுமே
எனை விட்டு வெளியேறி சோதித்தாய்!
உடன் யாருமில்லா இப்பயணத்தில்
படகை செலுத்துகிறேன் நான் தனியாய்!
கரையை சேருமோ என் பயணம்?
வரும் வழிகள் நெடுகிலும் பேராபத்தாய்!