மார்லன் பிராண்டோவை ஸ்க்ரீன்
டெஸ்ட் செய்வதற்காக சிறிய வீடியோ ரெக்கார்டருடன் தயங்கியப்படியே பிராண்டோவின் வீட்டிற்குள்
செல்கிறார் கப்போலோ. குதிரைவால் சடையுடன் தளர்ந்த உடையான கிமோனோ உடையில் தன் அறையில்
இருந்து வெளியே வருகிறார் பிராண்டோ. கப்போலோ அங்கு வருவதற்கு முன்னதாகவே டான் விட்டோ
கார்லியோனின் உருவமைப்பு மற்றும் குரல் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தன் மனதில்
தோன்றியதை கண்ணாடியில் ஒத்திகை பார்த்திருந்தார் பிராண்டோ. கப்போலோவின் லென்ஸ் வழியாக
மீண்டும் அவர் ஏற்கனவே ஒத்திகை செய்து வைத்திருந்த டான் விட்டோ கார்லியோனாக மாற தொடங்குகிறார்
பிராண்டோ, ஒரு கசங்கிய சட்டையையும் மேல் அணியையும் உடுத்தி கொள்கிறார், கையில் சிறிது
ஷூ பாலிஷ் எடுத்து தனது மீசையில் தடவிக் கொள்கிறார், டிஸ்யூ பேப்பரை சுருட்டி வாய்க்குள்
திணித்து கொண்டே காட் ஃபாதரின் முகம் புல்டாக் என்ற வகை நாயின் முகத்தை ஒத்து இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார் (இதைதான் நம்ம கமல் நாயகன் திரைப்படத்தில் வாயில்
வெற்றிலை பாக்கு போட்டு கொண்டு செய்திருப்பார்), கதைப்படி காட் ஃபாதருக்கு தொண்டையில்
ஏற்கனவே துப்பாகியால் சுடப்பட்டிருக்கும் என்பதற்காக தன்னுடைய குரலையும் அதற்கு ஏற்றார்போல
மாற்றிக்கொண்டு கப்போலோ கொண்டு வந்திருந்த இத்தாலிய சுருட்டையும் வாயில் புகைத்தப்படியே
பேசத்தொடங்குகிறார். டான் விட்டோ கார்லியோனாகவே மாறிப்போன பிராண்டோவை பார்த்து வாயடைத்து
திகைத்து நிற்கிறார் கப்போலோ. அவர் பதிவு செய்த விடியோவை பாரமவுண்ட் நிர்வாகிகளுக்கு
போட்டு காண்பித்தார் கப்போலோ, யாருக்குமே விடியோவில் இருப்பது பிராண்டோ தான் என்பதை
கப்போலோ சொல்லாமல் அறிந்து கொள்ள முடியவில்லை. விட்டோ கார்லியோன் வேடத்திற்கு மிகப்பொருத்தமானவர்
பிராண்டோ தான் என்பதை பாரமவுண்ட் நிர்வாகிகளாலும் மறுக்க முடியாமல் போகவே அந்த பாத்திரத்தில்
நடிக்க அவரையே ஒப்பந்தம் செய்தது.
திரைப்படத்திற்கான நடிகர்களை
தேர்ந்தெடுப்பதில் சிக்கல் பிராண்டோவோடு நின்றிடவில்லை, டான் விட்டோ கார்லியோனுக்கு
அடுத்தப்படியாக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமான மைக்கேல் கார்லியோனின் கதாபாத்திர
தேர்விலும் எதிர்மறையாகவே நின்றனர் கப்போலோவும் பாரமவுண்ட் பிக்சர்ஸும். ஏதோ ஒரு நாடகத்தில்
அல்பசினோவை பார்த்த கப்போலோ அவரின் முக அமைப்பு கதைக்கு ஏற்ற சிசிலி நகரத்தவர்களின்
தோற்றத்தை ஒத்திருந்துப்படியால் மைக்கேல் கார்லியோன் கதாப்பாத்திரத்திற்கான சரியான
தேர்வு அவர் தான் என்று முடிவு செய்து வைத்திருந்தார், ஆனால் அந்த நேரத்தில் அல்பசினோவோ
யாருமே அறிந்திடாத ஒரு நாடக நடிகராய் இருந்தார் மைக்கேல் கார்லியோன் பாத்திரத்திற்காக
அவருக்கு எடுத்த ஸ்க்ரீன் டெஸ்டிலும் அவர் சரியாக நடித்து காட்டவில்லை, மேலும் அவரது
குள்ளமான உயரம் மைக்கேல் கார்லியோன் பாத்திரத்திற்கு பொருந்தாது என்பதாகவே உணர்ந்தது
பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஆகவே அந்த பாத்திரத்திற்கு கொஞ்சம் பிரபலமான நடிகர்களான ஜேம்ஸ்கான்,
வாரன் பீட்டி அல்லது ஜாக் நிக்கல்சன் போன்றவர்களில் எவரையாவது நடிக்க வைக்கலாம் என்று
பரிந்துரை செய்தது, கப்போலோ இதற்கு சம்மதிக்கவில்லை, படத்தை ஆரம்பிப்பதற்கான தேதியும்
நேருங்கியப்படியால் அல் பசினோவையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அரைமனதுடன் அனுமதித்தது.
விட்டோ கார்லியோனின் மகள் கானி
கார்லியோனின் பாத்திரத்தை கப்போலோவின் சகோதரியான டாலியா செயரிடம் தர எவான்ஸ் விளைந்தும்
அதை ஏற்க கப்போலோ முன் வரவில்லை. டாலியா செயரின் இயல்பு அந்த கதாப்பாத்திரத்திற்கு
பொருந்தாது என்பதாகவே கப்போலோ உணர்ந்தார், இருப்பினும் புசோவின் வேண்டுகோளுக்கிணங்க
எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் டெஸ்டை பார்த்த பின் அவரையே நடிக்க வைக்க சம்மதித்தார். விட்டோ
கார்லியோனின் மூத்த மகனான சன்னி கார்லியோன் பாத்திரத்தில் நடிக்க ஜேம்ஸ் கானையும்,
விட்டோ கார்லியோனின் தத்து மகன் மற்றும் குடும்பத்தின்
சட்ட ஆலோசகராக வரும் டாம் ஹாகேன் பாத்திரத்தில் நடிக்க ராபர்ட் டுவாளையும் தேர்வு செய்தார்.
படத்தின் மற்ற காதாப்பாத்திரத்திற்கான நடிகர்களையும் அதுவரை மக்களிடம் பிரபலமாகாத இத்தாலிய
அமெரிக்க நடிகர்களையே தேர்வு செய்தார் கப்போலோ.
தொடரும்...
தி காட் ஃபாதர் - ஒரு வரலாறு (பகுதி3)