புதன், 24 அக்டோபர், 2012

முடிவில் ஒரு தொடக்கம்



சுடுகாட்டு மயானங்களில்
பிணங்களுடன் உறவாடும்
நடமாடும் பிணமான இவன்
தன் பாரச்சுமையையெல்லாம்
இங்கே இறக்கி வைக்கிறான்
கனத்த இதயங்களே - இவனை
கொஞ்சம் தாங்கி கொள்ளுங்கள்.

அவன் பிறந்தபோது
தாழ்த்தப்பட்டவனாம்
அதனால் என்றும் இவன்
தாழ்த்தபடுகிறான்
அவன் ஏழையாய்
இருந்ததினால்
இன்றும் ஏழையாய்
இருக்கிறான்

ஆயிரம் மனிதர்களை
இவன் நிதமும் காண்கின்றான்
அதில் சிலர் முகமூடி
அணிந்து கொண்டு
முகமே இல்லாத
முண்டங்களும் அதிலுண்டு
இவனே கண்டிராத முகம்
இவன் முகமே!

விபத்துகள் இவனை
வருந்தச் செய்வதில்லை!
மரணங்களில் தான்
மகிழ்ச்சி இவனுக்கு!
மருத்துவமும் இவனுக்கு
சமூக விரோதம்!
மருத்துவர்கள் இவனுக்கு
தீவிரவாதி!

பிணங்களுடன் தான்
இவனுடைய பிணைப்புகள்
அவர்கள் தான்
இவனது நண்பர்கள்!

இன்று சுடுகாட்டில்
பிணமெரிந்தால் தான்
நாளை இவன் வீட்டில்
அடுப்பெரியும்!

மனிதர்களே
உங்களின் முடிவுகளுக்காக
இவன் காத்திருக்கிறான்
ஏனேனில்
உங்களின் முடிவுகளில் தான்
இவன் வாழ்வின் தொடக்கம்!

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தொலைந்தவைகள்



நான்
தொலைந்தவைகளை பட்டியலிட்டால்
குறைந்தது இரண்டு நாளாவது வேண்டும்.

என் முதல் அகவையில்
நான் தொலைத்த
மோதிரத்திலிருந்தே
ஆரம்பித்து விட்டது
என் தொலைந்தவைகள்!

பள்ளிக்குச் சென்ற
முதல் நாளே
நான் தொலைத்த
என் முதல் பென்சில்!

பள்ளிக்குச் சென்ற
என் தங்கையை
அழைத்து வர மறந்துபோய்
அவளையும் தொலைத்திருக்கிறேன்
ஒரு பாதி நாள்!

பருவ வயதில்
அடிக்கடி தொலைத்திருக்கிறேன்
என் இதயத்தை!

எனக்கு தெரியாமல்
என் தங்கை எடுத்து தொலைத்த
என் பிரிய பார்க்கர் பேனா!

சென்னைக்கு
நான் அறிமுகமானபோது
தொலைந்த செல்போன்!

மறக்க முடியாத
தொலைந்தவைகளுடன்
இன்னும் நான் எங்கோ மறந்துவிட்ட
தொலைந்தவைகள்
ஏராளம்

இன்று என் மனைவியோ
கிடத்தப்பட்ட என் முன்பு
என்னை தொலைத்துவிட்டதாய்
அழுதபடி!
நான் தொலைத்தவைகளைவிட
இன்று அவள் தொலைத்தது
நிச்சயம் மீட்க முடியாது தான்!

வியாழன், 18 அக்டோபர், 2012

எனது நான்



எனது நான்
விழித்துக்கொண்டேயிருக்கிறான்
நானோ
தாலாட்டிக்கொண்டேயிருக்கிறேன்!

எனது நான்
ஒரு பயங்கரவாதி
எதையும் செய்வான்

எனது நான்
ஒரு தீவிரவாதி
எதற்கும் தயங்கமாட்டான்

எனது நான்
ஒரு சர்வாதிகாரி
நினைத்ததை முடிப்பான்

எனது நான்
ஒரு தந்திரவாதி
எவரையும் கவிழ்ப்பான்

எனது நான்
பதுங்கியிருக்கும் புலி
மனிதமுகத்தில் மிருகம்

எனது நான்
ஒரு ஊமை
பேசவே மாட்டான்

எனது நான்
விழித்துக்கொண்டேயிருக்கிறான்
நானோ
தாலாட்டிக்கொண்டேயிருக்கிறேன்!

விடியாத வரையில்



கனவுகளோடும், கற்பனைகளோடும்
உறவாடிக் கொண்டு
பணம் பற்றிய நினைப்பில்லாது
மனச் சலனம் சிறிதுமில்லாது
சாதி, மத பற்றில்லாது
இறைவன் பற்றிய சிந்தனையில்லாது
அடுத்தவரை கவிழ்க்கும்
சதியை செய்யாது
என்னை அழிக்கும்
விதியை என்னாது
அரசியல் கோட்பாடற்று
இன்ப, துன்ப நினைப்புமற்று
நான் கிட்டத்தட்ட
மனிதனாகவே வாழ்கிறேன்
விடியாத வரையில்!

உன்னை கண்ட நொடி


உன்னை கண்ட நொடி
           காதலது கொல்லுதடி!
உன் கை தொட்டபடி
           காலம் ஏங்குதடியே! 

விண்ணை எட்டும்படி
           உள்ளம் போனதடி !
நிலவும் உன்முன்பு
           வந்து துடிக்கிறதே!

நெஞ்சை சுட்டதடி
           உன் பார்வை வெப்பமடி!
இதயம் என்னுள்ளே
           வெந்து வெடிக்கிறதே!

பூவே பெண் பூவே
           நீயின்றி நானில்லை
என்பதெல்லாம்
          பொய்யாய் போனதடி!

உதிரம் சொட்டுதடி
           நீ பார்த்து சென்ற விழி!
இமையும் என் விழிகள்
          மூட வலிக்கிறதே!

என்னை விட்டபடி
           உன் காதல் போனதடி!
உயிரும் என்னுள்ளே
           நொந்து மடிகிறதே!

மண்ணை முட்டும் படி
         மேகமது வந்தடி!
வானும் என்போலே 
         இன்று அழுகிறதே!

நீயே என் கூவே
           நீயின்றி வாழ்வில்லை
என்றுமெல்லாம்
          மெய்யாய் ஆனதடி!

புதன், 17 அக்டோபர், 2012

உறவுகள்



உறவுகள்
இப்போதெனக்கு
அந்நியமாகவேபட்டன

முன்பை விட
இப்போது நான்
உறவுகளை விட்டு
கொஞ்சம் விலகியேயிருக்கிறேன்

போனா தூக்க
நாலு பேராவது வேணும்
என்பாள் அம்மா

அந்த
நான்குபேருக்காகத்தானா
நமது உறவுகள்?

அந்த நான்குபேரை மட்டும்
இப்போது நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்!

இன்றைய காதல்



இதயத்தை கடன் வாங்கி
சிலகாலம் வாழ்ந்து விட்டு
கடனை வட்டியுடன் சேர்ந்து
திருப்பித்தரும் கெட்டிக்காரனாக
இன்றைய காதலன்!
ஆயிரம் அழகாய் இருந்தாலும்
துப்பாக்கி பொம்மையையே
தேடி விளையாடி
இன்னொரு பொம்மையைத் தேடும்
விளையாட்டு குழந்தையாய்
இன்றைய காதலி!
மனதை பார்க்காமல்
பணத்தை மட்டுமே
பார்க்கின்ற
கொடுமைக்கார மாமியாராய்
இன்றைய காதல்!


நரமாமிச தேவதை




உதிரம் குடிக்கும் உந்தன் அதரங்கள் 
நரம்பு கிழிக்கும் உன் நகங்கள் 
இதயம் உடைக்கும் உன் கண்கள் 
மூளை பிதுக்கும் உன் அகங்கள் 
எலும்புகள் நொறுக்கும் பற்கள் 
சதைகள் பிளக்கும் உன் கரங்கள் 

என்னை உண்ட பின் 
உன்னிடம் கேட்டேன் 
என்னிடம் சுவை எதில் மிக என்று

உன் புஜங்கள் தான் என்று 
இயல்பாய் சொன்னாய்!

சதுரங்கம்





எனக்கும் என் வாழ்க்கைக்குமான 
சதுரங்க விளையாட்டில்
எப்போதும் தோற்பது நான் தான்!

சகலவித திட்டங்களோடும்
என்னை தோற்கடிக்கவென்று
காய் நகர்த்துகிறது வாழ்க்கை!
எந்த திட்டமும் இல்லாமல்
இழந்து கொண்டே இருக்கிறேன்
ராணியையும், ராஜாவையும்!

சிப்பாய்களை வைத்தே
என்னை வெல்லும் 
திறமை கொண்டது
என் வாழ்க்கை
குதிரையின் வலிமையும் 
யானையின் பலமும் 
புரிவதே இல்லை எனக்கு!

குதிரை, யானை
மந்திரி, ராணியென 
ஒவ்வொன்றையும் இயல்பாய்
வெட்டுகிறது வாழ்க்கை!
ராஜாவை நகர்த்த 
முடியாமல் போவதே
என் வாடிக்கை!

கருப்பு வெள்ளை
கட்டங்களால் ஆன
இந்த சதுரங்க விளையாட்டில்
என் வாழ்க்கை தோற்கும்போதுதான்
என்னால் வெல்ல முடியும்!