புதன், 24 அக்டோபர், 2012

முடிவில் ஒரு தொடக்கம்



சுடுகாட்டு மயானங்களில்
பிணங்களுடன் உறவாடும்
நடமாடும் பிணமான இவன்
தன் பாரச்சுமையையெல்லாம்
இங்கே இறக்கி வைக்கிறான்
கனத்த இதயங்களே - இவனை
கொஞ்சம் தாங்கி கொள்ளுங்கள்.

அவன் பிறந்தபோது
தாழ்த்தப்பட்டவனாம்
அதனால் என்றும் இவன்
தாழ்த்தபடுகிறான்
அவன் ஏழையாய்
இருந்ததினால்
இன்றும் ஏழையாய்
இருக்கிறான்

ஆயிரம் மனிதர்களை
இவன் நிதமும் காண்கின்றான்
அதில் சிலர் முகமூடி
அணிந்து கொண்டு
முகமே இல்லாத
முண்டங்களும் அதிலுண்டு
இவனே கண்டிராத முகம்
இவன் முகமே!

விபத்துகள் இவனை
வருந்தச் செய்வதில்லை!
மரணங்களில் தான்
மகிழ்ச்சி இவனுக்கு!
மருத்துவமும் இவனுக்கு
சமூக விரோதம்!
மருத்துவர்கள் இவனுக்கு
தீவிரவாதி!

பிணங்களுடன் தான்
இவனுடைய பிணைப்புகள்
அவர்கள் தான்
இவனது நண்பர்கள்!

இன்று சுடுகாட்டில்
பிணமெரிந்தால் தான்
நாளை இவன் வீட்டில்
அடுப்பெரியும்!

மனிதர்களே
உங்களின் முடிவுகளுக்காக
இவன் காத்திருக்கிறான்
ஏனேனில்
உங்களின் முடிவுகளில் தான்
இவன் வாழ்வின் தொடக்கம்!

1 கருத்து:

  1. புதைக்கபடும் இடம் தான் கல்லறை என்றால்....
    ஒவ்வொரு மனிதனின் இதயம் கூட கல்லறை தான்....
    சுட்ட கவிதை....

    பதிலளிநீக்கு