சித்திரை ஒன்று
சீக்கிரம் விடிந்தது
அம்மா எழுப்பியதால்
காலையில் குளித்து
கோயில் சென்றேன்
அப்பா திட்டியதால்
அழகழகாய் கலைஅழகை
நான் அன்று தான் கண்டேன்
ஆயிரம் கற்களால்
அழகிய மாளிகையாய் கோயில்
ஆனால் அங்கு குடியிருந்ததோ
கடவுளும், வெளவால்களும்
மட்டுமே.
எல்லா மனிதனும்
பிறந்து வந்த
கர்ப்பகிரகமெனும்
பெயர் கொண்ட இடத்தினுள்
அய்யர் மட்டுமே சென்றார்.
கல்லை வெட்டி
செதுக்கிய சிற்பம்
உள்ளேயிருந்தது
அய்யர் ஏதோ உளறி,
சூடம் ஏற்றி,
சிற்பத்தை சுற்றி,
மணியையும் அடித்தார்,
மனிதர் அனைவரும்
மதித்து வணங்கினர்
அதுதான் கடவுளென்று
நான் அன்றுதான் கண்டேன்.
குடம்குடமாய் பாலெடுத்து
அய்யர் கடவுள் மேல்
ஊற்றினார்
சில ஏழைக் கூட்டம்
காத்திருந்தது
வெளியே பசியோடு!
அழகாய் மின்னிய
பட்டையெடுத்து
அய்யர் கடவுளுக்கு
சாத்தினார்
வெளியே ஆயிரம் குழந்தைகள்
வேடிக்கை பார்த்தனர்
அம்மணமாய்!
மௌனமாய் நான்
வெளியில் நடந்தேன் - என்
மனதை கல்லாக்கிக் கொண்டு
இன்று என் மனமே
கடவுள் தானோ?
கல் வெட்டு