திங்கள், 29 ஜூலை, 2019

ஆதலினால் காதல் தவீர்



இயல்பாய் இருக்க முடிகிறதா உன்னால்???

சிரிக்க மறந்ததுண்டா நீ???

மார் அடைப்பு இல்லாமல் இதயவலி உணர்ந்ததுண்டா???

உறக்கம் கெடுக்கும் கனவுகள் வந்ததுண்டா???

காயம் தரும் காத்திருப்புகளுக்கு நேர விரயம் செய்ய தயாரா???

இந்த உலகையே வெறுக்கும் நிலைக்கு வந்ததுண்டா???

தனியேப்பேசி தன்னிலை மறக்கும்
பித்தநிலை அடைந்ததுண்டா???

இரவு பகலாய் பகலோ இரவாய் குழப்பும் மாற்றம் கண்டதுண்டா???

தண்ணீரின்றி வறண்ட பூமியாய்
கண்ணீரின்றி கண்கள் வேண்டுமா???

பிரிவின் வலி மிகவும் கொடிது
அனுபவித்து பார்க்கும் ஆவலுண்டா???

நீச்சல் தெரியாமல் கிணற்றின் ஆழம்
குதித்து அறியும் சாகசம் தேவையா???

அலைப்பேசி அனல்பேசியாக
அப்புறம் அப்புறமென அநாவசிய பேச்சுக்கள் அவசியந்தானா???

பட்டாம்பூச்சி பறக்கும் திசையெல்லாம் பார்த்து ரசிக்கும் நேரமிருக்கிறதா???

வரமாய் தோன்றும் சாபம் காதல்...
சொர்க்கத்திலும் நரகம் காதல்...
அமிர்தில் கலந்த ஆலகாலம்...
பரந்தவெளியில் குறுகிய வட்டம்...

காதல் போதையில்...
அண்ணாந்து பார்த்தால் பூமி
குனிந்து பார்த்தால் வானம்
தலைகீழாய் நீ...!

ஆதலினால் காதல் தவீர்...!

ஞாயிறு, 12 மே, 2019


கோணல் முக நாயைக் கண்டாலே
துறத்தி விடுகின்றன, தெரு நாய்கள்.
அதன் சந்தை மதிப்பு தெரியாமல்...!

குரைக்கிற நாய் கடிக்காதென்பதை
கேட்டாலே
உணர்ச்சிவசப்படுகிறாள்
வெறிநாய்க்கடியால் இறந்தவனின் மனைவி...!

காதலியோடு அவள் வீட்டின்
நாயையும் வசப்படுத்த வேண்டி
பிஸ்கெட் பாக்கெட்டுகள்
விற்பனையாகின்றன
சில்லரைக்கடைகளில்...!

ஆட்டிரச்சியுடன் நாய்கறியும்
சேர்க்கப்படுவதாக செய்திகள் பரவ
தேடப்பட்டன தொலைந்துப்போன
தெரு நாய்கள்...!

திருடிச்சேர்த்த பொருளை பதுக்க
காட்டு பங்களாவுடன்
வேட்டை நாய்கள்
வாங்குவதும் அவசியமாகிறது
அரசியல்வாதிகளுக்கு...!

புயல் வெள்ளத்தால்
ஊரே மூழ்கி கிடக்க
தன்னைக்கடித்த நாய்க்கு
எதுவும் ஆகிவிட கூடாதென்று
வேண்டிகொள்கிறான்
தடுப்பூசி போட காசில்லாதவன்...!

செல்லக்குட்டியென நாயை
கொஞ்சும் ஒருத்தி,
தன் மகனை நாயே எனத்திட்ட
விழுந்தடித்து வெளியே ஓடியது
அவள் வீட்டு நாய்...!

புது கார் வாங்கி
கோவில் செல்லும் முன்னமே
கால்தூக்கி அபிஷேகம்
செய்தது
டயருகுக்கு பழகிய நாயொன்று...!

மின்சார கம்பிகள்
பூமிக்குள் புதையுண்டு
மின் கம்பங்களெல்லாம்
அகற்றப்பட்ட பின்,
தன் கழிவிடங்களைத்தேடி
அலைகின்றன
நகரத்து நாய்கள்...!

பிச்சைக்காரி போட்ட
ஒரு துண்டு ரொட்டிக்காக
அவளுடன் சுற்றிய
தெரு நாய் ஒன்று,
முந்தைய இரவில் - அவளை
புணர்ந்து கொன்றவனை
துரத்தி குறைப்பதை,
காவல் துறையுடன் வந்த
மோப்ப நாயாவது புரிந்துகொள்ளுமா???

செவ்வாய், 5 ஜனவரி, 2016

சகிப்பின்மை



சாதாரண மழையின் போதும்,
பேருந்தினுள்ளும் மழையடிக்க
குடை பிடித்து சகித்து கொள்கிறேன்!

எதுவுமே செய்திராத அரசியல்வாதி,
மறுபடியும் ஓட்டு கேட்டுவர
காசு வாங்கி சகித்து கொள்கிறேன்!

சாலை விதியை சரியாய் மதித்தும்,
சில எதிர்ப்பார்க்கும் போக்குவரத்து காவலரிடம்
ரூபாய் நூறு நீட்டி சகித்து கொள்கிறேன்!

கடவுள் உயர்வு தரும் நம்பிக்கையில்,
காசு பார்த்து விபூதி தரும்
அர்ச்சகரையும் சகித்து கொள்கிறேன்!

புத்தகத்தை ஒப்புவிக்கும்,
அனுபவமில்லா ஆசிரியர்களின் வகுப்பில்
தூங்கி விழுந்து சகித்து கொள்கிறேன்!

பக்கத்து வீட்டு குப்பைகளெல்லாம்,
என் வீட்டு வாசல் வந்தால்
ஓரம் ஒதுக்கி சகித்து கொள்கிறேன்!

ஆவணம் பெரும் அவசரத்தில்,
காக்க செய்யும் அதிகாரிகளிடம்
கையூட்டு கொடுத்து சகித்து கொள்கிறேன்!

நேரம் போக்க நினைத்து வந்தால்,
வாய் திறந்தால் பெருமைப்பேசும்
நண்பர்களையும் சகித்து கொள்கிறேன்!

இத்தனையும் சகித்துகொள்ளும் என்னால்
ஏனோ அம்மா சமையலில்
சிறிது உப்பு கூடவோ குறையவோ போனால்
சகித்து கொள்ளவே முடிவதில்லை!!

பசலை நோய்!



உனக்காக நான் இருப்பேன்
என்னிதயம் முழுதும் உன் ஞாபகத்தில்
எனக்காக நீ இருந்தால்
என்னுலகம் முழுதும் உன் காலடியில்

வந்து போன உந்தன் நினைவில்
வெந்து போகுது எந்தன் இதயம்

நீயும் இருந்தால் மண்ணில் இருப்பேன்
இல்லை என்றானால் மண்ணில் புதைவேன்

உனது முகம் பார்க்கவே
காத்து இருந்தேன்
காத்து இருந்தேன்
நீ எங்கே எங்கே எங்கே?

நீ வீசிய வார்த்தை என் செவியில் ஒலிக்குதே
நீ பேசிய மௌனம் என் இதயம் கிழிக்குதே
மொழியால் விழியால்
நீ என்னை வருத்தவே
காயங்கள் போதுமே
கனவுகள் வலிக்குதே
விழிகளின் வழியிலே என்னுதிரம் வடியுதே!

ஒன்றும் அறியாது இருந்தவள் நான்
என் மனதினுள் நுழைந்து போதித்தாய்!
நீயே என் வாழ்க்கை என்றானதுமே
எனை விட்டு வெளியேறி சோதித்தாய்!
உடன் யாருமில்லா இப்பயணத்தில்
படகை செலுத்துகிறேன் நான் தனியாய்!
கரையை சேருமோ என் பயணம்?
வரும் வழிகள் நெடுகிலும் பேராபத்தாய்!

செவ்வாய், 3 நவம்பர், 2015

அம்மாவின் அரிவாள்மனை


முதுகில் எதை வைத்து அழுத்தினாலும்
நறுக்கி தள்ளும்
அம்மாவின் அரிவாள்மனை!

அம்மாவிற்கு சீதனமாக தரப்பட்ட
எத்தனையோ பண்ட பாத்திரங்கள்
துருப்பிடித்து பழசாகி
பழைய இரும்புக்கும்
பொங்கல் முந்திய நாள் கருகியும்
போன போதும்
அரிவாள்மனை மட்டும்
பக்குவமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது!

அம்மாவின் அப்பா பட்டறையில்
அவளுக்காகவே அவராள்
அடிக்கப்பட்டு உருப்பெற்ற
அரிவாள்மனையாதலால்
அதற்கு எப்பொழுதுமே தனிச்சிறப்பு!

அவசரத்திற்கு அரிவாள்மனையை
வாங்கிய பக்கத்து வீட்டு
ராணியக்கா அதை
சிறு நெளிசலுடன் திருப்பித்தர
வசவு வாங்கி கட்டிக்கொண்டாள்
அதிலிருந்தே அரிவாள்மனையை
யாருக்கும் இரவலாய் கொடுப்பதில்லை!

உறவு வீடுகளுக்கு சென்றாலும்
தன்னுடைய அரிவாள்மனையைப்போல
அவர்களுடையது இல்லையென்று
தம்பட்டம் அடிப்பதற்காகவே
காய்கறி நறுக்கும் வேலையில்
இறங்கிவிடுவாள்!

அரிவாள்மனைக்கே பழக்கப்பட்டதால்
கத்தியும் அரிவாளும்
கொலை செய்வதற்கான ஆயுதங்கள்
என்பதே அம்மாவின் நினைப்பு,
அவைகளுக்கு வீட்டில் என்றுமே இடமில்லை!

மீன்கள் நறுக்கையில்
தவறுதலாய் விரலில்பட
ரத்தம் சொட்டியபோதும்
திட்டு வாங்கிக்கொண்டது
வழுக்கிசென்ற மீன் தானேயன்றி
அரிவாள்மனையல்ல!

கடந்த வாரம் தவறி விழுந்துடைந்த
அரிவாள்மனையுடன் சேர்ந்து
அம்மாவின் மனமும் உடைந்து போயிற்று
தேங்காய் திருவியுடன் சேர்ந்த
புது அரிவாள்மனை வாங்கியும்கூட
அவளுக்கோ மனநிறைவில்லை !

அம்மாவுக்கும் அரிவாள்மனைக்குமான
அன்பை
இதுவரை யாருமே அறிந்ததேயில்லை,
அடுக்களைக்குள் முடங்கிக்கிடக்கும்
ஒவ்வொரு அம்மாக்களுக்குமே
இதுபோன்றதோர் பிணைப்பு
இருக்கத்தான் செய்கிறது!

புதன், 28 அக்டோபர், 2015

ரஷோமான் விளைவு



ஒரு நிகழ்வை அந்த நிகழ்வில் தொடர்புடைய வெவ்வேறு நபர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு முரண்பட்டு விவரிப்பதே ரஷோமான் விளைவு எனப்படுகிறது. இப்படி ஒரு சொற்றொடர் உருவானதற்கு பின்னனியில் இருப்பது புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா இயக்கிய 'ரஷோமான்' என்ற திரைப்படம் என்பது வியப்பான செய்தி. ஒரு கொலையைப்பற்றி அந்த கொலைக்கு சாட்சிகளாய் இருக்கக்கூடிய நான்கு நபர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு திரித்து விவரிப்பதே ரஷோமான் படத்தின் கதை. 1950ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் திரைக்கதை நேரியல் அல்லாத (Non Linear) என்று சொல்லப்படுகிற திரைக்கதை வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டது, சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதையும், வெனிஸ் பட விழாவில் தங்கச்சிங்கம் விருதையும் பெற்று இன்றும் இது போன்ற திரைக்கதைகளுக்கு முன்னோடியாய் இருக்கும் இந்த திரைப்படம் ஜப்பானிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. குதிரையில் காட்டை கடந்து கொண்டிருக்கும் ஒரு வீரனையும் அவனது மனைவியையும் மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் ஒரு திருடன் பார்த்துவிடுகிறான். வீரனின் மனைவியின் அழகில் மயங்கிய திருடன் அவளை எப்படியாவது அடையும் முயற்சியில் வீரனை ஏமாற்றி கயிற்றில் கட்டிவிட்டு அவனது மனைவியை கற்பழித்துவிடுகிறான் பின் அந்த வீரனும் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போகிறான். அந்த வீரனின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதை நிகழ்வை நேரில் பார்த்த ஒரு விறகு வெட்டி, குற்றம் சாட்டப்பட்ட அந்த திருடன், கற்பழிக்கப்பட்ட மனைவி மற்றும் இறந்துபோன வீரனின் ஆவி ஆகிய நால்வரும் சாட்சிகளாக வெவ்வேறு விதமாக விவரிக்க இறுதியில் உண்மை எது என்பதை விறகுவெட்டியின் மூலமாக நமக்கு தெரியப்படுத்துவதாக முடிகிறது.



ரஷோமான் விளைவை பின்பற்றி தமிழில் திரைக்கதை அமைக்கப்பட்ட முக்கியமான இரண்டு திரைப்படங்கள் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் 1954ம் ஆண்டு வெளியான "அந்த நாள்" மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்து 2001ம் ஆண்டு வெளியான "விருமாண்டி". சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் உறுவான அந்த நாள் திரைப்படத்தில் படம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமடங்களிலேயே நாயகன் சிவாஜி கணேசன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விடுவார் பின் மீதிப்படம் முழுக்க கொலை செய்தது யார் கொலைக்கான காரணம் என்ன என்பதை விசாரிப்பதாக செல்கிறது கதை. விசாரிக்கப்படும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரிப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இறுதியில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதுடன் முடிகிறது. இந்த திரைப்படம் முழுமையுமே ரஷோமான் பாதிப்பில் உறுவானவை என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்த படமான உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்த விருமாண்டி திரைப்படத்தில் அபிராமியின் மரணத்திற்கு காரணமான நிகழ்வை பசுபதியும் கமலும் முரண்பட்டு விவரிப்பது ராஷோமான் விளைவின் யுத்தியே ஆனாலும் அந்த நாள் திரைக்கதையை போல முழுக்கவும் ராஷோமான் விளைவை சார்ந்ததாக இத்திரைப்படம் இல்லாதது நிச்சயம் உலக நாயகனின் புத்திசாலித்தனத்தால் நடந்ததாகவே இருக்க வேண்டும்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

சேவின் பொலிவிய யுத்தம்


கியூபாவை கைப்பற்ற பிடெல் காஸ்ட்ரோவிற்கு பேருதவி புரிந்து பின் சில காலம் அவரது அமைச்சரவையில் சில முக்கிய பதவிகள் வகித்தும் அதையெல்லாம் வெறுத்து மீண்டும் யுத்தகளம் மட்டுமே செல்ல ஆவல் கொண்டிருந்த சே குவேரா அடுத்து செல்ல முடிவெடுத்திருந்த நாடு காங்கோ. தன் பதவி மற்றும் கியுபா குடியுரிமையை உதறிவிட்டு காஸ்ட்ரோவிற்கு மட்டும் ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு யாருக்கும் தெரியாமல் கியூபாவை விட்டு வெளியேறினார் சே குவேரா. 1965ம் ஆண்டில் காங்கோவில் தன் கொரில்லா பயிற்சியை தொடங்கிய சே குவேரா தான் பயிற்சி கொடுத்த வீரர்களிடம் புரட்சியில் ஆர்வம் இல்லாததை உணர்ந்து காங்கோவில் இருந்து வெளியேற முடிவு செய்தார், பின்னர் அவர் செல்வதற்கு முடிவு செய்திருந்த இடம் பொலிவியா. பொலிவியாவை ராணுவ புரட்சியால் வென்று விட்டால் சுற்றி இருக்கும் ஐந்து நாடுகளையும் ராணுவ புரட்சி மூலம் எளிதாக வென்று விடலாம் என்று உணர்ந்த படியால் பொலிவியாவை தேர்ந்தெடுத்தார் சே குவேரா.


நவம்பர் 1966 இல், சே குவேரா அடொல்ப் மேனா கோன்சாலாஸ் என்ற பெயரில் நடுத்தர வயது உருகுவே தொழிலதிபர் போல மாறுவேடமிட்டு பொலிவியா வந்திரங்கினார். வந்த வேகத்திலேயே தன் வேடத்தை களைந்து பொலிவியாவில் கொரில்லா பயிற்சியை ஆரம்பித்தார். சே குவேராவின் படையில் பெரும்பான்மையான வீரர்கள் கியூபா மற்றும் பெருவை சார்ந்தவர்களாகவே இருந்தனர், போலியாவை சார்ந்தவர்களை தன் படையில் விரைவாக சேர்க்க முடியும் என்று நம்பியிருந்தார் ஆனால் துரதிருஷ்டவசமாக சே குவேராவால அதை செய்ய முடியவில்லை.

சே குவேரா முதலாவதாக பெரியதாக நம்பியிருந்த பொலிவியாவின் இடது சாரிகள் தங்களின் தலைமையில் புரட்சி செய்வதானால் மட்டுமே சே குவேராவுக்கு உதவுவதாக தெரிவிக்க அதை சே குவேரா ஏற்க மறுத்த காரணத்தினால் பொலிவிய இடதுசாரிகளும் சே குவேராவிற்கு உதவி செய்ய மறுத்தனர்.

சே குவேராவின் இரண்டாவது நம்பிக்கையாய் இருந்தவர்கள் பொலிவிய விவசாயிகள் கியூப போரின் போது கியூபாவின் விவசாயிகளின் உதவியால் வீரர்களுக்கு உணவு கிடைத்த படியால் அதே நிலையை பொலிவியாவிலும் உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால்  பொலிவிய விவசாயிகளோ வெளிநாட்டவரான சே குவேராவை நம்ப தயாராக இல்லாத காரணத்தினால் அவர்களும் உதவ மறுத்தனர்.

இப்படி எல்லாமே சே குவேராவுக்கு எதிராய் திரும்பியிருந்த அவ்வேளையில் பொலிவிய அரசாங்கம் சே குவேராவின் இருப்பையும் அவரின் இருப்பிடத்தையும் அமெரிக்காவின் உளவமைப்பான சி.. மூலம் அறிந்து கொண்டு 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிவிய ராணுவம் நடத்தியது. தாக்குதலில் சேவின் படை முற்றிலுமாக சிதறுண்டு போனது ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர். கடுமையான ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்படிருந்த சே குவேரா 16 பேர் அடங்கிய அவரது சிறிய படையை வைத்து கொண்டு மேற்கொண்டு முன்னேற முடியாமல் சிக்கியிருந்தார்.

இறுதியில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி காலை பொலிவிய ராணுவம் ஒரு கனவாய் வழியாக சென்று கொண்டிருந்த  சே குவேராவின் படையை சுற்றி வளைத்தனர், மதியம் 1.10 மணியளவில் பெரும் துப்பாக்கி சண்டை வெடித்தது. கொரிலாக்கள்  பலரும் கொல்லப்பட்டனர் மிஞ்சியவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சண்டையில் ஒரு தோட்டா சே குவேராவின் இடது காலை தாக்கவே அவரால் மேற்கொண்டு ஓட முடியாமல் போனது. சே குவேராவை கைது செய்த பொலிவிய ராணுவம் அவரை அந்த நகரத்திலுள்ள ஒரு பழைய பள்ளியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறை வைத்தது. மறுநாள் சே குவேராவை கொல்வதற்கு பொலிவிய அதிபரிடமிருந்து உத்தரவு வரவே அக்டோபர் 9, 1967 அன்று 1:10 மணிக்கு சே குவேரா துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.



சாதாரண போராளியாய் இருந்த ஒரு மாபெரும் மனிதனின் பெயர் வரலாற்றில் இடம்பெற காரணமாக அமைந்த தினம் இன்று...

திங்கள், 7 செப்டம்பர், 2015





கடந்த இரண்டு வாரங்களில் வெளிவந்திருக்கும் திரைப்படங்களில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்கள் தனி ஒருவன் மற்றும் பாயும் புலி. இரண்டு படங்களுக்கும் உண்டான ஒற்றுமை: இரண்டு படங்களின் ஹீரோக்களும் போலிஸ் அதே போல இரண்டு படங்களின் வில்லன்களும் தன்னுடைய சுய லாபத்திற்க்காக பெற்ற அப்பாவையே கொல்ல துணிந்தவர்கள்.

ஏ.ஜி.எஸ் கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிப்பில், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, ஹிப் ஹாப் தமிழன் ஆதியின் இசையில் எழுத்தாளர்கள் சுபா அவர்களின் வசன உதவியுடன், ஒளி இயக்குனர் ராம்ஜியின் ஒளிப்பதிவில், இதுவரை நேரடி தமிழ் படங்களை எடுத்திறாது மற்ற மொழி படங்களை மட்டுமே ரீமேக் செய்து வந்துள்ள ஜெயம் ராஜாவாய் அறியப்படும் இயக்குனர் மோகன் ராஜா முதன் முதலாய் தன்னுடைய சொந்த கதையுடன் களம் இறங்கியிருக்கும் படம் தனி ஒருவன். மித்ரன் ஐ.பி.எஸ்ஸாக வரும் ஜெயம் ரவி ஐ.பி.எஸ் பயிற்சியின் போதே தன்னுடன் பயிற்சி பெரும் நண்பர்களின் உதவியுடன் யாருக்கும் தெறியாமல் இரவுகளில் நடக்கும் குற்றங்களை தடுக்கிறார் அதோடல்லாமல் ஒவ்வொரு சிறு சிறு குற்றங்களுக்கும் பின்னனியாய் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய குற்றம் இருக்கும் என்பதை கனித்து, அந்த குற்றங்களின் பின்னனியை ஆராய்ந்து ஊரில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்குமே மூலமாய் திகழும் மூன்று நபர்களின் முழு விவரத்தையும் அறிந்து கொள்கிறார், பயிற்சி முடிந்து ஐ.பி.எஸ்ஸாய் பதவியேற்றதும் அந்த மூன்று பேரில் அதிகம் குற்றம் புரியும் ஒரு நபரை முதலாவதாக டார்கெட் செய்வதே அவருடைய நோக்கமாய் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அந்த மூன்று நபர்களையும் ஆட்டி வைப்பவர் தொழிலதிபர் சித்தார்த் அபிமன்யூவாக வரும் அரவிந்த் சாமிதான் என்பதை அறிந்து கொண்டு தன்னுடைய ஒரே டார்கெட் அவர் தான் என்ற முடிவுக்கு வருகிறார். ஐ.பி.எஸ் பயிற்சி முடிந்து பதவி ஏற்றதும் அரவிந்த் சாமியின் ஒவ்வொரு திட்டங்களையும் அறிந்து கொண்டு தடையாய் வந்து நிற்கிறார். ஜெயம் ரவிதான் தன்னுடைய திட்டங்கள் செயல்படாமல் போக காரணம் என்பதை தெறிந்து கொண்ட அரவிந்த் சாமி ஜெயம் ரவியின் உடம்பில் மருத்துவர்கள் உதவியுடன் ஒரு சிப்பை பொருத்தி விடுகிறார் இதன் மூலம் ஜெயம் ரவி தனக்கெதிராய் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியையும் இருந்த இடத்தில் தெரிந்து கொண்டு அதர்க்கெதிராய் காய் நகர்த்தி ஜெயம் ரவியின் ஒவ்வொரு திட்டத்தையும் தோல்வியடைய செய்கிறார். ஜெயம் ரவி தனக்குள் பொருத்தியிருக்கும் சிப்பை எவ்வாறு கண்டுப்பிடிக்கிறார் அரவிந்த் சாமியை எவ்வாறு வீழ்த்துகிறார் என்பதே விறு விறு க்ளைமாக்ஸ்.

ஜெயம் ரவியின் கேரியரில் இது மிக முக்கியமான படம் தன்னுடைய பாத்திர படைப்பை காட்டிலும் வில்லனின் பாத்திரம் வழுவானது என்பதை தெரிந்திருந்தும் மித்ரன் ஐ.பி.எஸ்ஸாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகியாக வரும் நயன்தாரா அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாய் செய்திருக்கிறார். படத்தை முழுவதுமாக தாங்கி பிடிப்பவர் வில்லனாக வரும் அரவிந்த் சாமி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாவற்றுக்கும் அடி தடியில் இறங்காமல் ஒவ்வொரு காயையும் சாமர்த்தியமாக நகர்த்தும் மிகவும் ஸ்டைலிசான வில்லன் வேடம் அரவிந்த் சாமிக்கு மிகப்பொருத்தம். ஹிப் ஹாப் தமிழன் ஆதியின் இசையில் பாடல்கள் அந்தளவுக்கு படத்திற்க்கு ஈடு கொடுக்கவில்லை என்றாலும் பின்னனி இசை பரவாயில்லை எனும் ரகம். படத்தின் வேகத்திற்கு மிக முக்கிய பங்காக இருப்பது ஒளி இயக்குனர் ராம்ஜியின் ஒளிப்பதிவு. எழுத்தாளர்கள் சுபாவுடன் சேர்ந்து இயக்குனர் மோகன் ராஜாவும் வசனம் எழுதியிருக்கிறார் பல இடங்களில் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் படத்தை பார்த்து வெந்து நொந்து நூடுல்ஸாய் போன நமக்கெல்லாம் கொஞ்சம் ஆறுதல் தந்திருக்கிறது இந்த படம்.

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விசால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சூரி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, டி.இமானின் இசையில், ஒளி இயக்குனர் வேல்ராஜின் ஒளிப்பதிவில், இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் பாயும் புலி. மதுரையில் பணத்திற்காக தொழிலதிபர்கள் ஒவ்வொருவராய் கடத்தி கொல்லப்பட கொலையாளிகளை பிடிக்கும் முயர்ச்சியில் ஒரு காவலர் இறந்து விடுகிறார். திருச்சியில் இருந்து மதுரைக்கு மாறுதலாகி வரும் அசிஸ்டெண்ட் கமிஸ்னர் ஜெய சீலனாக விஷால் பதவியேற்க பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே மதுரை வந்து கடத்தல் காரர்கள் அனைவரையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூண்டோடு அழிக்கிறார். எல்லாம் முடிந்து விட்டதாய் நினைக்கும் நேரத்திலும் அடுத்தடுத்து அதே முறையில் கொலைகள் தொடரவே இதற்கு பின்னனியில் வேரொருவர் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட விஷால் அவரை தேடும் முயர்சியில் இறங்குகிறார். அனைத்து கடத்தல் மற்றும் கொலைகளுக்கும் காரணம் விஷாலின் சொந்த அண்ணனாக வரும் இயக்குனர் சமுத்திரக்கனி என்பதை விஷால் எவ்வாறு கண்டுப்பிடிக்கிறார் என்பதை  சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்தரன்.


ஏ.சி ஜெயசீலனாக வரும் விஷால் அவருடைய உயரத்திற்கேற்ப போலிஸ் பாத்திரத்தில் சரியாய் பொருந்தியிருக்கிறார். நாயகி காஜல் அகர்வாலுக்கு படத்தில் விஷாலை காதலிப்பதை தவிர வேரு வேலை எதுவும் கொடுக்கப்படவில்லை. வில்லனாக வரும் சமுத்திரக்கனிக்கு விஷாலுக்கு அடுத்தப்படியான முக்கிய கதாப்பாத்திரம் அதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார். காமெடியனாக சூரி சகலகலா வல்லவனுக்கு பிறகு இதிலும் எரிச்சல் ஊட்டுகிறார், இமானின் இசையில் முயல் குட்டி பாடலும் சிலுக்கு மரம் பாடலும் பரவாயில்லை. சுசீந்தரன் இந்த படத்தை இயக்குனர் ஹரியை மனதில் வைத்து இயக்கியிருப்பார் போல அவருடைய ஃபார்முலாக்கள் அங்கங்கே கொட்டிக்கிடக்கிறது. ஒரு முறை பார்க்கலாம் எனும் சுமார் வட்டத்திற்குள் அடைந்துவிட்டது பாயும் புலி.

புதன், 26 ஆகஸ்ட், 2015


காப்போலோவின் அடுத்த தலைவலியாக வந்து நின்றவர் படத்தின் எடிட்டிங் வேலைக்காக காப்போலோவால் பரிந்துரைக்கப்பட்டு பணியாற்றி வந்த ஆராம் அவேக்கியான், அதற்கு முன்னதாக இரண்டு படங்களை இயக்கியிருந்த ஆராம் அவேக்கியான் தி காட் ஃபாதர் பட்த்தின் இயக்குனர் பதவியை காப்போலோவிடம் இருந்து பறிக்கும் ஆசையுடன் காப்போலோவைப்பற்றி தவரான விமர்சனைத்தை எவான்ஸிடம் கூறினார். படத்தின் முக்கிய காட்சியான சோலோக்ஸொ கொல்லப்படும் காட்சியை எடிட்டிங் செய்வதற்கு தேவையான கோணங்களில் போதிய அளவில் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றசாட்டை முன் வைத்தார். அவேக்கியான் கூறிய குற்றச்ச்சாட்டை பற்றி அறிந்துகொண்ட காப்போலோ பீட்டர் சின்னர் என்ற எடிட்டரின் உதவியுடன் அதே காட்சிகளை எடிட் செய்து எவான்ஸிர்க்கு காட்டினார் காப்போலோ காட்டிய காட்சிகள் எவான்ஸிர்க்கு பிடித்திருந்த படியால் மேற்கொண்டு படத்தை எடிட் செய்ய அவேக்கியானிற்கு பதிலாக பீட்டர் சின்னரையே எடிட்டராக அமர்த்தினார் காப்போலோ.

காப்போலோவுக்கும் படத்தின் ஒளிப்பதிவாளரான கொர்டான் வில்லிஸுக்கும் இடையிலும் படம் முடியும் வரையிலும் சுமூகமான உறவு இருந்திடவில்லை. ஒத்திகைக்காக காப்போலோ அதிகமான நேரத்தை செலவழிப்பதில் வில்லிஸுக்கு உடன்பாடு இருந்ததில்லை, வில்லிஸ் நடிகர்களுடன் நடந்து கொள்ளும் கடுமையான விதத்தை காப்போலோ விரும்பவில்லை. காப்போலோவை எதுவும் சரியாக செய்யத் தெரியாதவர் என்றே அனைவரிடமும் கூறிவந்தார் வில்லிஸ். இப்படியிருக்க ஒரு நாள் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைப்பெற அந்த செட்டை விட்டு வெளியேரினார் வில்லிஸ் என்ன தான் முட்டி மோதிகொண்டாலும் ஒருவருக்கொருவர் கடைசி வரை காலை வாரி விட்டுக்கொள்ளவில்லை.

இறுதியாக மூன்று மணி நேரம் ஓடும் படத்தை பாராமவுண்ட்டின் கடுமையான அறிவுறுத்தலின்படி 135 நிமிடங்கள் வெட்டி தள்ளினார் காப்போலோ, வெட்டப்பட்ட படத்தை பார்த்த எவான்ஸோ சரித்திரத்தை எடுத்து விட்டு வெரும் முன்னோட்டத்தை மட்டுமே காண்பிப்பது போல் இருப்பதாக கருதினார். ஆகவே மூன்று மணி நேரம் ஓடக்கூடியப்படமாகவே மார்ச் 15 1972 புதன் கிழைமையில் வெளியானது தி காட் ஃபாதர். படம் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த வேளையிலும் கூட அடுத்த சிக்கல் உருவானது...
தொடரும்...

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015


தி காட் ஃபாதர் நாவலை படமாக எடுக்க போவதாக பாரமவுண்ட் பிக்சர்ஸில் இருந்து அறிவிப்பு வந்த அடுத்த நாளே அடுத்த சிக்கலாக வந்து நின்றவர் ஜோ கொலோம்போ. சிசிலியன் மாஃபியா குடும்பங்களை உள்ளடக்கிய ஐந்து மாஃபியா குடும்பத்தில் ஒன்றான கொலோம்போ குடும்பத்தின் தலைவர் தான் ஜோ கொலோம்போ. தி காட் ஃபாதர் நாவலில் வரும் ஐந்து மாஃபியா குடும்பங்களின் பின்னனி மற்றும் இத்தாலியர்களை அதீத கொடூரமானவர்களாக காட்டியிருந்த அமைப்பு ஆகியவை படமாக உருவானால் தனக்கும் தன் குடும்பத்திற்க்கும் அவப்பெயரை உருவாக்கும் என்ற காரணத்தினால் தான் உருவாக்கிய இத்தாலிய அமெரிக்க குடியுரிமை அமைப்பின் மூலமாக படத்திற்கு எதிராக நியூயார்க் நகர வீதிகளில் பேரணி நடத்தினார், பேரணிக்கு ஆதரவாக இத்தாலியர்கள் ஒன்று திரண்ட போதிலும் படத்தை நிறுத்துவதற்கான சாத்திய கூறுகள் எதுவும் தென்படாததால் கதையில் காட்டப் பட்டிருக்கும் விட்டோ கார்லியோனின் அணுகுமுறையை போன்றே வன்முறை வழியை கையிலெடுத்தார். தயாரிப்பாளர் அல் ருட்டின் கார் கண்ணாடிகளை உடைத்து படத்தை உடனே நிறுத்துமாறும் இல்லையேல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற குறிப்பையும் விட்டுச்சென்றனர் அவரின் அடியாட்கள், அடுத்ததாக எவான்ஸை தொலைபேசியில் அழைத்து உடனே ஊரை காலி செய்யுமாறும் இல்லையேல் அவரது முகத்தை கிழித்து அவரின் குழந்தையையும் காயப்படுத்த போவதாக மிரட்டல் விடுத்தார். படப்பிடிப்பு நடைப்பெற்ற இடங்களில் எல்லாம் வன்முறை வெடிக்கவே மேற்கொண்டு படப்பிடிப்பை தொடரும் நிலை இல்லாமல் போனதால் கொலோம்போவை நேரடியாக சந்திக்கும் முடிவிற்கு வந்த பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஒரு ஹோட்டலில் அல் ருட்டியும் கொலோம்போவும் சந்திக்க ஏற்பாடு செய்தது. படத்தில் மாஃபியா என்ற வார்த்தையை நீக்க வேண்டும் மற்றும் தங்களது அமைப்புக்கு படம் வெளியானதும் நன்கொடை வழங்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன் வைத்தார் கொலோம்போ, ருட்டியும் அதற்கு சம்மதிக்கவே தன் இத்தாலிய அமெரிக்க குடியுரிமை அமைப்பு மூலமாக படத்திற்கு தேவையான எந்த உதவியையும் வழங்குவதாகவும் கூறினார் கொலோம்போ அதோடு நில்லாமல் ஜிகர்டண்டா அசால்ட் சேதுவைப் போல படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலெல்லாம் தவராமல் ஆஜர் ஆனார், டான் விட்டோ கார்லியோனின் மருமகன் கார்லோ ரிஷி பாத்திரத்தில் நடிக்க  தன்னுடன் இருந்த கியானி ரூசோவை சிபாரிசு செய்து அவரை நடிக்கவும் வைத்தார். படம் முடிவதற்கு முன்னதாகவே சுடப்பட்டதால் கொலோம்போவின் இடைஞ்சல்களும் நின்றுவிட அவரது அமைப்புக்கும் எந்த ஒரு நங்கொடையையும் வழங்கும் நிலை பாரமவுண்ட் பிக்சர்ஸுக்கு வரவில்லை.


கொலோம்போவின் மெய்காவலரான லென்னி மாண்டெனோ டான் விட்டோ கார்லியோனின் மெய்காவலர் கதாப்பாத்திரமான லூக்கா பிராசியின் வேடத்திற்கு பொருத்தமாக இருந்ததால் அவரையும் நடிக்க வைத்தார் காப்போலோ. படத்தில் இவர் பிராண்டோவுடன் பேசும் காட்சியில் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார் எத்தனை முறை ஒத்திகை பார்த்திருந்தாலும், பிராண்டோ முன்னால் வந்து நின்றதும் இயல்பாக நடிக்க முடியவில்லை, திரும்ப திரும்ப இந்த காட்சியை ஒளிப்பதிவு செய்ய விரும்பாத காப்போலோ, இந்த காட்சிக்கு முன்பாக டான் விட்டோ கார்லியோனை சந்திக்கும் முன் லூக்கா பிராசி அவருடன் பேசுவதற்கான வசனத்தை ஒத்திகை பார்ப்பது போல் ஒரு புது காட்சி ஒன்றை அமைத்தார் அதன் மூலம் அவர் பதட்டத்துடன் நடித்து கொடுத்த அந்த காட்சியும் அந்த சூழலுக்கு ஏற்றவாறு பொருந்தியது.

நடிகர்கள் தங்களின் மாஃபியா கதாப்பாத்திரத்திற்கான உடல் மொழியை மேம்படுத்துவதற்காக உண்மையான மாஃபியா கும்பலை சார்ந்தவர்களுடனே தங்களது ஆய்வு பணியை தொடங்கினார்கள். பிராண்டோ பஃபொலினொ கும்பலை சார்ந்த ஒருவரை சந்தித்து தனது பாத்திரத்திற்கான உடல் மொழியை மேலும் மெருகேற்றினார். அல் பாசினோ, ஜேம்ஸ் கான், ராபர்ட் டுவாள் ஆகியோரும் தங்களது பாத்திரத்திற்கான ஆய்வுக்காக மாஃபியா கும்பலுடன் சுற்றித்திரிந்தனர். படத்தில் முக்கிய கதாப்பாதிரத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் ஒவ்வொருவரின் உடல்மொழியும் நிஜ மாஃபியாக்களிடம் இருந்து கற்று கொண்டது, இதர நடிகர்களோ ஏற்கனவே உண்மையான மாஃபியாக்களுடன் பணி புரிந்தவர்கள் என்பதால் அவர்களின் கதாப்பாத்திரத்திற்காக எந்த ஆய்வையும் மேற்கொள்ளும் அவசியம் இல்லாமல் போனது.

தொடரும்...