புதன், 28 அக்டோபர், 2015

ரஷோமான் விளைவு



ஒரு நிகழ்வை அந்த நிகழ்வில் தொடர்புடைய வெவ்வேறு நபர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு முரண்பட்டு விவரிப்பதே ரஷோமான் விளைவு எனப்படுகிறது. இப்படி ஒரு சொற்றொடர் உருவானதற்கு பின்னனியில் இருப்பது புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா இயக்கிய 'ரஷோமான்' என்ற திரைப்படம் என்பது வியப்பான செய்தி. ஒரு கொலையைப்பற்றி அந்த கொலைக்கு சாட்சிகளாய் இருக்கக்கூடிய நான்கு நபர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு திரித்து விவரிப்பதே ரஷோமான் படத்தின் கதை. 1950ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் திரைக்கதை நேரியல் அல்லாத (Non Linear) என்று சொல்லப்படுகிற திரைக்கதை வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டது, சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதையும், வெனிஸ் பட விழாவில் தங்கச்சிங்கம் விருதையும் பெற்று இன்றும் இது போன்ற திரைக்கதைகளுக்கு முன்னோடியாய் இருக்கும் இந்த திரைப்படம் ஜப்பானிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. குதிரையில் காட்டை கடந்து கொண்டிருக்கும் ஒரு வீரனையும் அவனது மனைவியையும் மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் ஒரு திருடன் பார்த்துவிடுகிறான். வீரனின் மனைவியின் அழகில் மயங்கிய திருடன் அவளை எப்படியாவது அடையும் முயற்சியில் வீரனை ஏமாற்றி கயிற்றில் கட்டிவிட்டு அவனது மனைவியை கற்பழித்துவிடுகிறான் பின் அந்த வீரனும் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போகிறான். அந்த வீரனின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதை நிகழ்வை நேரில் பார்த்த ஒரு விறகு வெட்டி, குற்றம் சாட்டப்பட்ட அந்த திருடன், கற்பழிக்கப்பட்ட மனைவி மற்றும் இறந்துபோன வீரனின் ஆவி ஆகிய நால்வரும் சாட்சிகளாக வெவ்வேறு விதமாக விவரிக்க இறுதியில் உண்மை எது என்பதை விறகுவெட்டியின் மூலமாக நமக்கு தெரியப்படுத்துவதாக முடிகிறது.



ரஷோமான் விளைவை பின்பற்றி தமிழில் திரைக்கதை அமைக்கப்பட்ட முக்கியமான இரண்டு திரைப்படங்கள் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் 1954ம் ஆண்டு வெளியான "அந்த நாள்" மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்து 2001ம் ஆண்டு வெளியான "விருமாண்டி". சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் உறுவான அந்த நாள் திரைப்படத்தில் படம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமடங்களிலேயே நாயகன் சிவாஜி கணேசன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விடுவார் பின் மீதிப்படம் முழுக்க கொலை செய்தது யார் கொலைக்கான காரணம் என்ன என்பதை விசாரிப்பதாக செல்கிறது கதை. விசாரிக்கப்படும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரிப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இறுதியில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதுடன் முடிகிறது. இந்த திரைப்படம் முழுமையுமே ரஷோமான் பாதிப்பில் உறுவானவை என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்த படமான உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்த விருமாண்டி திரைப்படத்தில் அபிராமியின் மரணத்திற்கு காரணமான நிகழ்வை பசுபதியும் கமலும் முரண்பட்டு விவரிப்பது ராஷோமான் விளைவின் யுத்தியே ஆனாலும் அந்த நாள் திரைக்கதையை போல முழுக்கவும் ராஷோமான் விளைவை சார்ந்ததாக இத்திரைப்படம் இல்லாதது நிச்சயம் உலக நாயகனின் புத்திசாலித்தனத்தால் நடந்ததாகவே இருக்க வேண்டும்.

0 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்:

கருத்துரையிடுக