வெள்ளி, 9 அக்டோபர், 2015

சேவின் பொலிவிய யுத்தம்


கியூபாவை கைப்பற்ற பிடெல் காஸ்ட்ரோவிற்கு பேருதவி புரிந்து பின் சில காலம் அவரது அமைச்சரவையில் சில முக்கிய பதவிகள் வகித்தும் அதையெல்லாம் வெறுத்து மீண்டும் யுத்தகளம் மட்டுமே செல்ல ஆவல் கொண்டிருந்த சே குவேரா அடுத்து செல்ல முடிவெடுத்திருந்த நாடு காங்கோ. தன் பதவி மற்றும் கியுபா குடியுரிமையை உதறிவிட்டு காஸ்ட்ரோவிற்கு மட்டும் ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு யாருக்கும் தெரியாமல் கியூபாவை விட்டு வெளியேறினார் சே குவேரா. 1965ம் ஆண்டில் காங்கோவில் தன் கொரில்லா பயிற்சியை தொடங்கிய சே குவேரா தான் பயிற்சி கொடுத்த வீரர்களிடம் புரட்சியில் ஆர்வம் இல்லாததை உணர்ந்து காங்கோவில் இருந்து வெளியேற முடிவு செய்தார், பின்னர் அவர் செல்வதற்கு முடிவு செய்திருந்த இடம் பொலிவியா. பொலிவியாவை ராணுவ புரட்சியால் வென்று விட்டால் சுற்றி இருக்கும் ஐந்து நாடுகளையும் ராணுவ புரட்சி மூலம் எளிதாக வென்று விடலாம் என்று உணர்ந்த படியால் பொலிவியாவை தேர்ந்தெடுத்தார் சே குவேரா.


நவம்பர் 1966 இல், சே குவேரா அடொல்ப் மேனா கோன்சாலாஸ் என்ற பெயரில் நடுத்தர வயது உருகுவே தொழிலதிபர் போல மாறுவேடமிட்டு பொலிவியா வந்திரங்கினார். வந்த வேகத்திலேயே தன் வேடத்தை களைந்து பொலிவியாவில் கொரில்லா பயிற்சியை ஆரம்பித்தார். சே குவேராவின் படையில் பெரும்பான்மையான வீரர்கள் கியூபா மற்றும் பெருவை சார்ந்தவர்களாகவே இருந்தனர், போலியாவை சார்ந்தவர்களை தன் படையில் விரைவாக சேர்க்க முடியும் என்று நம்பியிருந்தார் ஆனால் துரதிருஷ்டவசமாக சே குவேராவால அதை செய்ய முடியவில்லை.

சே குவேரா முதலாவதாக பெரியதாக நம்பியிருந்த பொலிவியாவின் இடது சாரிகள் தங்களின் தலைமையில் புரட்சி செய்வதானால் மட்டுமே சே குவேராவுக்கு உதவுவதாக தெரிவிக்க அதை சே குவேரா ஏற்க மறுத்த காரணத்தினால் பொலிவிய இடதுசாரிகளும் சே குவேராவிற்கு உதவி செய்ய மறுத்தனர்.

சே குவேராவின் இரண்டாவது நம்பிக்கையாய் இருந்தவர்கள் பொலிவிய விவசாயிகள் கியூப போரின் போது கியூபாவின் விவசாயிகளின் உதவியால் வீரர்களுக்கு உணவு கிடைத்த படியால் அதே நிலையை பொலிவியாவிலும் உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால்  பொலிவிய விவசாயிகளோ வெளிநாட்டவரான சே குவேராவை நம்ப தயாராக இல்லாத காரணத்தினால் அவர்களும் உதவ மறுத்தனர்.

இப்படி எல்லாமே சே குவேராவுக்கு எதிராய் திரும்பியிருந்த அவ்வேளையில் பொலிவிய அரசாங்கம் சே குவேராவின் இருப்பையும் அவரின் இருப்பிடத்தையும் அமெரிக்காவின் உளவமைப்பான சி.. மூலம் அறிந்து கொண்டு 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிவிய ராணுவம் நடத்தியது. தாக்குதலில் சேவின் படை முற்றிலுமாக சிதறுண்டு போனது ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர். கடுமையான ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்படிருந்த சே குவேரா 16 பேர் அடங்கிய அவரது சிறிய படையை வைத்து கொண்டு மேற்கொண்டு முன்னேற முடியாமல் சிக்கியிருந்தார்.

இறுதியில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி காலை பொலிவிய ராணுவம் ஒரு கனவாய் வழியாக சென்று கொண்டிருந்த  சே குவேராவின் படையை சுற்றி வளைத்தனர், மதியம் 1.10 மணியளவில் பெரும் துப்பாக்கி சண்டை வெடித்தது. கொரிலாக்கள்  பலரும் கொல்லப்பட்டனர் மிஞ்சியவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சண்டையில் ஒரு தோட்டா சே குவேராவின் இடது காலை தாக்கவே அவரால் மேற்கொண்டு ஓட முடியாமல் போனது. சே குவேராவை கைது செய்த பொலிவிய ராணுவம் அவரை அந்த நகரத்திலுள்ள ஒரு பழைய பள்ளியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறை வைத்தது. மறுநாள் சே குவேராவை கொல்வதற்கு பொலிவிய அதிபரிடமிருந்து உத்தரவு வரவே அக்டோபர் 9, 1967 அன்று 1:10 மணிக்கு சே குவேரா துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.



சாதாரண போராளியாய் இருந்த ஒரு மாபெரும் மனிதனின் பெயர் வரலாற்றில் இடம்பெற காரணமாக அமைந்த தினம் இன்று...

0 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்:

கருத்துரையிடுக