வியாழன், 13 ஆகஸ்ட், 2015




கடந்த மூன்று நாட்களாகவே வலைதளங்களிலும், செய்தி ஒளியலை வரிசைகளிலும் சுந்தர் பிச்சை என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எல்லாம் இவரின் புகைப்படத்துடன் "இந்தியனாய் பிறந்ததில் பெருமை" என்ற வாசங்களோடு பல பதிவுகள் உலாவுவதை காணமுடிகிறது. நம் இந்திய பிரதமரே வாழ்த்துக்கள் சொல்லும் இந்த சுந்தர் பிச்சை யார்? நாம் பெருமை கொள்ளும் அளவுக்கு நம் தேசத்திற்கு அவர் என்ன செய்து விட்டார்??

ஆகஸ்ட் 10 2015 அன்று இந்தியரான(தமிழரான) சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கூகுள் என்பது மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஒரு இந்தியர் அதுவும் தமிழர் நியமிக்கப்பட்டிருப்பது நிச்சயம் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விசயம் தான் என்றாலும் நம் சென்னையில் பிறந்திருந்தாலும் ஒரு அமெரிக்க குடிமகனாகவே வாழ்ந்து வரும் இவரை இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுமளவுக்கு இவர் நம் தேசத்துக்காக எதையும் இதுவரை செய்திடவில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு 2014 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்யா நாடெல்லா நியமிக்கப்பட்ட போதும் இதே ஆர்ப்பாட்டம் தான்.

இது சுந்தர் பிச்சையின் தவறோ அல்லது சத்யா நாடேல்லாவின் தவறோ இல்லை நம் அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடத்தும் இருக்கிற பிழை. நம் அப்துல் கலாம் அய்யா அவர்கள் நம் இந்தியாவிலையே வெற்றி பெற்ற அளவுக்கு மற்ற திறமைசாலிகளுக்கும் வாய்ப்புகள் அமைவது என்பது நம்முடைய நாட்டில் குதிரை கொம்பு தான். 2009 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(சிதம்பரத்தில் பிறந்தவர்) அவர்களும் "நான் இந்த தேசத்தில் பிறந்தேன் என்பது வெறும் விபத்து தான் அதில் பெருமைப்பட எதுவும் இல்லை நாமெல்லாம் மனிதர்கள்" என்று கூறியிருக்கிறார்.

மின்னஞ்சலை கண்டுபிடித்த சிவா அய்யாதுரை அவர்களோ "2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்' (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன்மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்'' என்கிறார்.


இந்தியர்களாய் பிறந்து புலம் பெயர்ந்து சாதித்தவர்களின் பட்டியல் மிக நீளம் வருங்காலங்களில் அது இன்னும் நீளும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூறு பாடல் வரிகளை வைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியது மட்டும் தான் நம்மால் முடிவது...

0 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்:

கருத்துரையிடுக