வெள்ளி, 26 அக்டோபர், 2012

எதிர்காலத்திற்காக


இளைஞனே
நிமிர்ந்து நில்
இமயம் உன்னை
அண்ணாந்து பார்க்கட்டும்!

இளைஞனே
நீ குட்டக்குட்ட குனிவதில்லை
குட்டாமலே
வளைந்து ஒடிந்துபோகிறாய்

இளைஞனே
நீ
புகைக்குள் புதைந்து
புகைஞனாகிப் போனாய்
அந்த வெண்புல்லாங்குழலில்
என்ன தான் இருக்கிறது
இப்படி ஊதித்தள்ளுகிறாய்!
அந்த புல்லாங்குழலில் கேட்பது
சந்தோச ராகமென
நீ உணரலாம்
ஆனால் அது சோகராகமென்பதை
புற்றுநோய் நிருபித்துவிடும்!

போதைக்குள் புகுந்து
அடிமையாகிப் போகிறாய்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
உன் சுதந்திரதாகம் தனியாது
நீ குடித்து குடித்தே
தாகத்தை தீர்த்துக் கொள்வதாய்
நினைக்கிறாய்
ஆனால் அது தனிவதில்லை
உனக்கு விடுதலை வாங்கி தர
எந்த காந்தியடிகளும்
வரப்போவதில்லை.

இளைஞனே
திருந்திவிடு
இமயம் உன்னை
அண்ணாந்து பார்க்கட்டும்!

நீ மட்டும் திருந்திவிட்டால்..

இளைஞனே!
கொஞ்சம் நில்
கொஞ்சம் குனிந்து கொள்
உன் தலையை
தட்டப் பார்க்கிறது வானம்!

வியாழன், 25 அக்டோபர், 2012

நம்பிக்கை




அன்றொறு நாள்
நானோ தனிமையில்
இருளான கரும் அறையில்
அன்னையின் கருவறையில்!

பூமியில் பிறந்திட
நானும் காத்திருந்தேன்
விழிகளை திறந்து
கொண்டே பார்த்திருந்தேன்
அன்னையின் அலறலையும்
காதில் கேட்டுக்கொண்டிருந்தேன்

என் மெய்
தாயிடமிருந்தபோதோ
பேரின்பம்
பூமியை தொட்டபின்போ
பேரதிர்ச்சி!

விழித்திருந்தும்
உலகெனக்கு தெறியவில்லை
வெளிச்சத்தை 
தேடியபோதும் கிடைக்கவில்லை

விடியலோ என் வானில்
இனி என்றும் இல்லை
பார்வையோ என் கண்ணில்
ஒரு போதும் இல்லை
நிறங்கள்கூட என்றெனக்கும்
கருப்பாகவே!

நம்பிக்கையெனும் சூரியனை
கைகளிலே கொண்டு
வாழ்கின்றேன் நானுமிங்கு
எந்நாளும் விடியலிலே!
எரிமலைப் போன்ற
என் உணர்ச்சியூம்
இமயமலைப் போன்ற
என் நம்பிக்கையினால்
பனிமலையாய் இன்று

இருளான என்னுலகம்
ஒளியாக இன்று
வாழ்கின்றேன் நானுமிங்கே
தன்னம்பிக்கையாலே!

புதன், 24 அக்டோபர், 2012

கல் வெட்டு



சித்திரை ஒன்று
சீக்கிரம் விடிந்தது
அம்மா எழுப்பியதால்
காலையில் குளித்து
கோயில் சென்றேன்
அப்பா திட்டியதால்

அழகழகாய் கலைஅழகை
நான் அன்று தான் கண்டேன்
ஆயிரம் கற்களால்
அழகிய மாளிகையாய் கோயில்
ஆனால் அங்கு குடியிருந்ததோ
கடவுளும், வெளவால்களும்
மட்டுமே.

எல்லா மனிதனும்
பிறந்து வந்த
கர்ப்பகிரகமெனும்
பெயர் கொண்ட இடத்தினுள்
அய்யர் மட்டுமே சென்றார்.

கல்லை வெட்டி
செதுக்கிய சிற்பம்
உள்ளேயிருந்தது
அய்யர் ஏதோ உளறி,
சூடம் ஏற்றி,
சிற்பத்தை சுற்றி,
மணியையும் அடித்தார்,

மனிதர் அனைவரும்
மதித்து வணங்கினர்
அதுதான் கடவுளென்று
நான் அன்றுதான் கண்டேன்.

குடம்குடமாய் பாலெடுத்து
அய்யர் கடவுள் மேல்
ஊற்றினார்
சில ஏழைக் கூட்டம்
காத்திருந்தது
வெளியே பசியோடு!

அழகாய் மின்னிய
பட்டையெடுத்து
அய்யர் கடவுளுக்கு
சாத்தினார்
வெளியே ஆயிரம் குழந்தைகள்
வேடிக்கை பார்த்தனர்
அம்மணமாய்!

மௌனமாய் நான்
வெளியில் நடந்தேன் - என்
மனதை கல்லாக்கிக் கொண்டு
இன்று என் மனமே
கடவுள் தானோ?

முடிவில் ஒரு தொடக்கம்



சுடுகாட்டு மயானங்களில்
பிணங்களுடன் உறவாடும்
நடமாடும் பிணமான இவன்
தன் பாரச்சுமையையெல்லாம்
இங்கே இறக்கி வைக்கிறான்
கனத்த இதயங்களே - இவனை
கொஞ்சம் தாங்கி கொள்ளுங்கள்.

அவன் பிறந்தபோது
தாழ்த்தப்பட்டவனாம்
அதனால் என்றும் இவன்
தாழ்த்தபடுகிறான்
அவன் ஏழையாய்
இருந்ததினால்
இன்றும் ஏழையாய்
இருக்கிறான்

ஆயிரம் மனிதர்களை
இவன் நிதமும் காண்கின்றான்
அதில் சிலர் முகமூடி
அணிந்து கொண்டு
முகமே இல்லாத
முண்டங்களும் அதிலுண்டு
இவனே கண்டிராத முகம்
இவன் முகமே!

விபத்துகள் இவனை
வருந்தச் செய்வதில்லை!
மரணங்களில் தான்
மகிழ்ச்சி இவனுக்கு!
மருத்துவமும் இவனுக்கு
சமூக விரோதம்!
மருத்துவர்கள் இவனுக்கு
தீவிரவாதி!

பிணங்களுடன் தான்
இவனுடைய பிணைப்புகள்
அவர்கள் தான்
இவனது நண்பர்கள்!

இன்று சுடுகாட்டில்
பிணமெரிந்தால் தான்
நாளை இவன் வீட்டில்
அடுப்பெரியும்!

மனிதர்களே
உங்களின் முடிவுகளுக்காக
இவன் காத்திருக்கிறான்
ஏனேனில்
உங்களின் முடிவுகளில் தான்
இவன் வாழ்வின் தொடக்கம்!

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தொலைந்தவைகள்



நான்
தொலைந்தவைகளை பட்டியலிட்டால்
குறைந்தது இரண்டு நாளாவது வேண்டும்.

என் முதல் அகவையில்
நான் தொலைத்த
மோதிரத்திலிருந்தே
ஆரம்பித்து விட்டது
என் தொலைந்தவைகள்!

பள்ளிக்குச் சென்ற
முதல் நாளே
நான் தொலைத்த
என் முதல் பென்சில்!

பள்ளிக்குச் சென்ற
என் தங்கையை
அழைத்து வர மறந்துபோய்
அவளையும் தொலைத்திருக்கிறேன்
ஒரு பாதி நாள்!

பருவ வயதில்
அடிக்கடி தொலைத்திருக்கிறேன்
என் இதயத்தை!

எனக்கு தெரியாமல்
என் தங்கை எடுத்து தொலைத்த
என் பிரிய பார்க்கர் பேனா!

சென்னைக்கு
நான் அறிமுகமானபோது
தொலைந்த செல்போன்!

மறக்க முடியாத
தொலைந்தவைகளுடன்
இன்னும் நான் எங்கோ மறந்துவிட்ட
தொலைந்தவைகள்
ஏராளம்

இன்று என் மனைவியோ
கிடத்தப்பட்ட என் முன்பு
என்னை தொலைத்துவிட்டதாய்
அழுதபடி!
நான் தொலைத்தவைகளைவிட
இன்று அவள் தொலைத்தது
நிச்சயம் மீட்க முடியாது தான்!

வியாழன், 18 அக்டோபர், 2012

எனது நான்



எனது நான்
விழித்துக்கொண்டேயிருக்கிறான்
நானோ
தாலாட்டிக்கொண்டேயிருக்கிறேன்!

எனது நான்
ஒரு பயங்கரவாதி
எதையும் செய்வான்

எனது நான்
ஒரு தீவிரவாதி
எதற்கும் தயங்கமாட்டான்

எனது நான்
ஒரு சர்வாதிகாரி
நினைத்ததை முடிப்பான்

எனது நான்
ஒரு தந்திரவாதி
எவரையும் கவிழ்ப்பான்

எனது நான்
பதுங்கியிருக்கும் புலி
மனிதமுகத்தில் மிருகம்

எனது நான்
ஒரு ஊமை
பேசவே மாட்டான்

எனது நான்
விழித்துக்கொண்டேயிருக்கிறான்
நானோ
தாலாட்டிக்கொண்டேயிருக்கிறேன்!