எங்கள் வீட்டு
புறவாசல்
நானே அறியாமல்
நான் வளர்ந்த
புறவாசல்!
முதல் முதலாக
எனது கிறுக்கல்கள்
ஆரம்பமானதும்
அங்குதான்
செடி கொடிகளுடன்
நான் பேசக்கற்றுக்கொண்டதும்
அங்குதான்
என்னுடைய எல்லா
உணர்வுகளையும்
புரிந்துகொள்ள
புறவாசலில்
எனக்கென்று உண்டு
ஒரு வேப்பமரம்!
என் கோபப் பொழுதுகளில்
அது அடிவாங்கிகொள்ளும்
என் வெற்றி பொழுதுகளில்
அது பூமாரித்தூ வும்
தொட்டில் வயது
கழிந்தும் கூட
எனது தொட்டிலின்
உத்திரமாய்
இருந்தது அந்த வேப்பமரம்
வசந்த காலத்தை
உணர வைத்ததும்
இலையுதிர் காலத்தை
வெறுக்க வைத்ததும்
அந்த வேப்பமரமே
வேப்பங்காற்றுக்கு
இணையான காற்று
எதுவுமில்லை என்று
புரிந்து கொண்டதும்
அங்கு தான்
வேப்பம்பூக்களும்,
வேப்பம்பழங்களும்
அங்கங்கு சிதறி
அழகாகவே இருக்கும்
புறவாசல்
வீடுமாறி நாளாகிவிட்டது
எதேச்சையாய்
பழைய வீடு போனபோது
வேப்பம்பூக்களின் சிதறல்களும்,
வேப்பம்பழங்களும்,
வேப்ப மரமுமே
இல்லாமல்
கலை இழந்து கிடந்தது
புறவாசல்!
புறவாசல்