திங்கள், 29 அக்டோபர், 2012

புறவாசல்




எங்கள் வீட்டு
புறவாசல்
நானே அறியாமல்
நான் வளர்ந்த
புறவாசல்!

முதல் முதலாக
எனது கிறுக்கல்கள்
ஆரம்பமானதும்
அங்குதான்

செடி கொடிகளுடன்
நான் பேசக்கற்றுக்கொண்டதும்
அங்குதான்

என்னுடைய எல்லா
உணர்வுகளையும்
புரிந்துகொள்ள
புறவாசலில்
எனக்கென்று உண்டு
ஒரு வேப்பமரம்!

என் கோபப் பொழுதுகளில்
அது அடிவாங்கிகொள்ளும்
என் வெற்றி பொழுதுகளில்
அது பூமாரித்தூ வும்

தொட்டில் வயது
கழிந்தும் கூட
எனது தொட்டிலின்
உத்திரமாய்
இருந்தது அந்த வேப்பமரம்

வசந்த காலத்தை
உணர வைத்ததும்
இலையுதிர் காலத்தை
வெறுக்க வைத்ததும்
அந்த வேப்பமரமே

வேப்பங்காற்றுக்கு
இணையான காற்று
எதுவுமில்லை என்று
புரிந்து கொண்டதும்
அங்கு தான்

வேப்பம்பூக்களும்,
வேப்பம்பழங்களும்
அங்கங்கு சிதறி
அழகாகவே இருக்கும்
புறவாசல்

வீடுமாறி நாளாகிவிட்டது
எதேச்சையாய்
பழைய வீடு போனபோது
வேப்பம்பூக்களின் சிதறல்களும்,
வேப்பம்பழங்களும்,
வேப்ப மரமுமே
இல்லாமல்
கலை இழந்து கிடந்தது
புறவாசல்!

சனி, 27 அக்டோபர், 2012

இயந்திர வாழ்க்கை



சினிமா கொட்டகைக்கு
குடும்பத்துடன் சென்று
மணர் பரப்பில் அமர்ந்து
பொழுது போக்கிற்காக இல்லாமல்

ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காக
ஆரவாரமாய் படம் பார்ப்பது போய்
இப்போது அமைதியாய்
அழுது கோண்டே பார்க்கப்படுகிறது
சீரியல்!

ஆட்டுரலில் அம்மாக்கள்
இட்லிக்கு மாவரைக்கையில்
உதவி புரியும் மகன்கள்
இப்போது தேவையே இல்லை
வேகமாய் அரைக்க வந்துவிட்டது
ஒவ்வொரு வீடுகளிலும்
கிரைண்டர்!

அம்மாக்களின் கைப்பக்குவம் சொல்லும்
அம்மிகள் இப்போது
கல்யாண மேடைகளில் மட்டுமே!
எல்லாவற்றையும் அரைக்க
மிக்சி!

விறகடுப்பில் சமைக்கும் போது
விறகொடித்து போடும்
மகன்கள் இனி இல்லவே இல்லை!

எல்லாம் கிடைத்துவிட்டதாய்
பெருமை படும் அம்மாக்களுக்கு
தெரிவதேயில்லை
எல்லாவற்றையும் இழந்து விட்டதை!

வெள்ளி, 26 அக்டோபர், 2012

அந்த நாட்கள்



பிரிக்க முடியாதபடி
சேர்ந்தே இருக்கிறது
என் பழைய நினைவுகளோடு
உன் நினைவுகளும்


புத்தகச் சுமையைத்தவிர
வேறெந்த சுமையும் இல்லாத
அந்த நாள் ஞாபங்கள்
என் மனச்சுமையை
மேலும் அதிகரிக்கிறது

தோலைக்காட்சியில் தெரிவோம்
என்ற நம்பிக்கையிலே
பக்கத்து வீட்டு
பங்கஜம் மாமியின்
ஆன்டெனா கம்பியை
தொங்கி உடைத்தது!

பிள்ளையார் கோயிலிலே
விடலை போட்ட தேங்காயினை
நம்மை விட சிறுவனிடம்
தட்டிப்பறித்தது!

குச்சி கம்பு விளையாடுகையில்
நீ அடித்த குச்சி
சோமு தாத்தாவின்
முதுகில் பட
அவர் நம்மை துரத்தி வந்தது!

சும்மாயிருந்த நாயின்மீது
கல்லெறிந்து
அது நம்மை கடிக்க வந்தது!

இப்படி எத்தனையோ
ஞாபங்கள்..
பரண் மீது தூங்கிகொண்டிருக்கும்
நினைவுகளில்
அதை எதிர்ப்பார்க்கும்போதெல்லாம்
அதன் தூசி பட்டு
என் கண்ணை உறுத்துகிறது!

தொண்டன்



காலை முதல்
மாலை வரை காத்திருந்து
மாலை உதிராமல்
கைகளுக்குள் அடக்கிவைத்து
உன் தலைவன் வந்தவுடன்
அவன் கழுத்தில் சூட்டினாய்

தேர்தல் நேரத்தில்
ஓடோடி ஓட்டு கேட்டாய்
எத்தனையோ ஓட்டு போட்டாய்
செத்து போன உன் தாத்தா பாட்டிக்கும்
வாக்குரிமை வாங்கி தந்தாய்

நீ ஓட்டு போட்ட
உன் தலைவன் வென்று விட்டான்
நீயோ தோற்று போனாய்!

எதிர்காலத்திற்காக


இளைஞனே
நிமிர்ந்து நில்
இமயம் உன்னை
அண்ணாந்து பார்க்கட்டும்!

இளைஞனே
நீ குட்டக்குட்ட குனிவதில்லை
குட்டாமலே
வளைந்து ஒடிந்துபோகிறாய்

இளைஞனே
நீ
புகைக்குள் புதைந்து
புகைஞனாகிப் போனாய்
அந்த வெண்புல்லாங்குழலில்
என்ன தான் இருக்கிறது
இப்படி ஊதித்தள்ளுகிறாய்!
அந்த புல்லாங்குழலில் கேட்பது
சந்தோச ராகமென
நீ உணரலாம்
ஆனால் அது சோகராகமென்பதை
புற்றுநோய் நிருபித்துவிடும்!

போதைக்குள் புகுந்து
அடிமையாகிப் போகிறாய்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
உன் சுதந்திரதாகம் தனியாது
நீ குடித்து குடித்தே
தாகத்தை தீர்த்துக் கொள்வதாய்
நினைக்கிறாய்
ஆனால் அது தனிவதில்லை
உனக்கு விடுதலை வாங்கி தர
எந்த காந்தியடிகளும்
வரப்போவதில்லை.

இளைஞனே
திருந்திவிடு
இமயம் உன்னை
அண்ணாந்து பார்க்கட்டும்!

நீ மட்டும் திருந்திவிட்டால்..

இளைஞனே!
கொஞ்சம் நில்
கொஞ்சம் குனிந்து கொள்
உன் தலையை
தட்டப் பார்க்கிறது வானம்!

வியாழன், 25 அக்டோபர், 2012

நம்பிக்கை




அன்றொறு நாள்
நானோ தனிமையில்
இருளான கரும் அறையில்
அன்னையின் கருவறையில்!

பூமியில் பிறந்திட
நானும் காத்திருந்தேன்
விழிகளை திறந்து
கொண்டே பார்த்திருந்தேன்
அன்னையின் அலறலையும்
காதில் கேட்டுக்கொண்டிருந்தேன்

என் மெய்
தாயிடமிருந்தபோதோ
பேரின்பம்
பூமியை தொட்டபின்போ
பேரதிர்ச்சி!

விழித்திருந்தும்
உலகெனக்கு தெறியவில்லை
வெளிச்சத்தை 
தேடியபோதும் கிடைக்கவில்லை

விடியலோ என் வானில்
இனி என்றும் இல்லை
பார்வையோ என் கண்ணில்
ஒரு போதும் இல்லை
நிறங்கள்கூட என்றெனக்கும்
கருப்பாகவே!

நம்பிக்கையெனும் சூரியனை
கைகளிலே கொண்டு
வாழ்கின்றேன் நானுமிங்கு
எந்நாளும் விடியலிலே!
எரிமலைப் போன்ற
என் உணர்ச்சியூம்
இமயமலைப் போன்ற
என் நம்பிக்கையினால்
பனிமலையாய் இன்று

இருளான என்னுலகம்
ஒளியாக இன்று
வாழ்கின்றேன் நானுமிங்கே
தன்னம்பிக்கையாலே!

புதன், 24 அக்டோபர், 2012

கல் வெட்டு



சித்திரை ஒன்று
சீக்கிரம் விடிந்தது
அம்மா எழுப்பியதால்
காலையில் குளித்து
கோயில் சென்றேன்
அப்பா திட்டியதால்

அழகழகாய் கலைஅழகை
நான் அன்று தான் கண்டேன்
ஆயிரம் கற்களால்
அழகிய மாளிகையாய் கோயில்
ஆனால் அங்கு குடியிருந்ததோ
கடவுளும், வெளவால்களும்
மட்டுமே.

எல்லா மனிதனும்
பிறந்து வந்த
கர்ப்பகிரகமெனும்
பெயர் கொண்ட இடத்தினுள்
அய்யர் மட்டுமே சென்றார்.

கல்லை வெட்டி
செதுக்கிய சிற்பம்
உள்ளேயிருந்தது
அய்யர் ஏதோ உளறி,
சூடம் ஏற்றி,
சிற்பத்தை சுற்றி,
மணியையும் அடித்தார்,

மனிதர் அனைவரும்
மதித்து வணங்கினர்
அதுதான் கடவுளென்று
நான் அன்றுதான் கண்டேன்.

குடம்குடமாய் பாலெடுத்து
அய்யர் கடவுள் மேல்
ஊற்றினார்
சில ஏழைக் கூட்டம்
காத்திருந்தது
வெளியே பசியோடு!

அழகாய் மின்னிய
பட்டையெடுத்து
அய்யர் கடவுளுக்கு
சாத்தினார்
வெளியே ஆயிரம் குழந்தைகள்
வேடிக்கை பார்த்தனர்
அம்மணமாய்!

மௌனமாய் நான்
வெளியில் நடந்தேன் - என்
மனதை கல்லாக்கிக் கொண்டு
இன்று என் மனமே
கடவுள் தானோ?